fbpx

மக்கள் சேவையில் இழுத்தடிப்பு செய்ய வேண்டாம் – அரச ஊழயர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு

அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவையாற்றும்போது இழுத்தடிப்பின்றி தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 சதவீதமானவை அரச அதிகாரிகளால் தீர்த்து வைக்கக்கூடியவையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மட்டுமன்றி அமைச்சர் கூட கொழும்பிலிருந்து வரவேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக பட்ச சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

நுவரெலிய மாவட்டச் செயலக அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் நடைபெற்ற நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நுவரெலிய மாவட்டத்தின் காணிப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து தயாரிக்கும் அறிக்கையை பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கிடைக்கச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அந்த அறிக்கையை சமர்பிக்கத் தவறினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுவரெலிய மாவட்டத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் உலக எல்லையை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பட்டிபொல தொடக்கம் பொரலந்த வரை கேபல் கார் வேலைத்திட்மொன்றை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “நுவரெலிய மக்களின் காணிப் பிரச்சினைக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இம்மாவட்டத்திலுள்ள அரசுக்கு சொந்தமான காணி தொடர்பில் மாவட்டச் செயலக அலுவலகம், பெருந்தோட்ட அமைச்சு மற்றும் காணிப் பதிவுத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றைத் தயாரித்து எதிர்வரும் ஒரு மாதக் காலப்பகுதிக்குள் அதனை சமர்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளுக்குமான அனுமதிப்பத்திரங்களை ரத்துச் செய்து மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பணிகளை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றோம்.

அதுபோன்றே, தோட்டங்களுக்கு அண்மையிலுள்ள சுகாதார மத்திய நிலையங்களுக்கு தேவையான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

அரச உத்தியோகத்தர்கள் மட்டத்தில் தீர்த்து வைக்கப்படக்கூடிய பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும்.

அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்துக்கு முன்னர் மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயார் செய்ய வேண்டும்.

அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடனேயே அதிகாரிகள் மாவட்ட குழுக்கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டும்.

இல்லையேல் அரச அதிகாரிகளால் தீர்வு வழங்கக்கூடிய வேலைகளையே ஜனாதிபதியாகிய எனக்கு இங்கு வந்து செய்ய வேண்டியிருக்கும்.

அரச அதிகாரியென்ற வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரச்சினைக்குரிய தீர்வாக மக்கள் மீது வழக்கு பதிய வேண்டுமென்று இங்கே வந்து கூற வேண்டாம்.

அதேபோன்று மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் அரச அதிகாரிகள் முன்னெடுக்கக் கூடாது.

நுவரெலிய மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் அவசியம். எனினும் சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் எதையும் இங்கு முன்னெடுக்கக்கூடாது.

இலங்கையிலுள்ள மிக உயர்ந்த இடத்திலேயே ஹோட்டன் சமவெளி உள்ளது.

எனவே இதற்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் ஆகாது. ஹோட்டன் சமவெளியை பாதுகாப்பதற்காக நாம் புதிய சட்டங்களை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று உலகின் எல்லையை பார்வையிடுவதற்காக பட்டிபொல தொடக்கம் பொரலந்த வரையில் கேபல் கார் சேவையை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

இன்று இங்கு கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகளின் 50 சதவீதமானவை அதிகாரிகள் மட்டத்தினால் தீர்த்து வைக்கப்படக் கூடியவை. எனினும் அரச உத்தியோகத்தர்களாகிய நீங்கள் உக்ரேன், ரஷ்யா நாடுகளுக்கிடையிலான யுத்தத்தைப் போன்று தான் பணியாற்றுகிறீர்கள்.

இதுபோன்ற சிறிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மட்டுமல்ல அமைச்சர் ஒருவர்கூட கொழும்பிலிருந்து செலவு செய்து இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

எனவே அரச அதிகாரிகள் இழுத்தடிப்புச் செய்யாமல் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற வேண்டியது கட்டயமாகும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Back to top button