fbpx

திருமண பதிவு செய்யப்படாமல் இடம்பெறும் வழக்காற்று திருமணம் செல்லுபடியாகுமா?

இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்தவகையில் குடும்ப சட்டத்தில் உள்ளடங்கும் திருமணம் தொடர்பிலான பதிவுகளின் தொடரில் வழக்காற்று சட்டம் பற்றி தெளிவுபடுத்துகின்றோம்.

1. இலங்கையில் திருமணம் தொடர்பான சட்டம்

இலங்கையில் பல்லின,பல மதங்களை கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரத்துக்கு அமைவாக திருமண சட்டங்கள் இருக்கின்றன. அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும் வட மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு தேசவழமை சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொது திருமண சட்டமும்(General Marriage Ordinance) உண்டு.

ஏற்கனவே பொது திருமணசட்டத்தில் தேவைப்படுத்தப்படும் தகைமைகள்/தகுதிகள் என்னவென்று பார்த்திருந்தோம்.

இந்தப்பதிவில் வழக்காற்று திருமணங்கள் அல்லது சமயாசார திருமணங்களின் ஏற்புடைமை பற்றி ஆராய்கின்றோம்.

2. வழக்காற்று திருமணம் என்றால் என்ன?

பல நூற்றாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள், மத விழுமியங்களின் அடிப்படையில் திருமணம் நடாத்தப்படுதலை இது குறிக்கும்.

இலங்கையின் சுதேச சட்டங்களாக தேசவழமை சட்டம், கண்டிய சட்டம், இஸ்லாமிய சட்டம் ஆகியன காணப்படுகின்றன. இத்தகைய சட்டங்களுக்கும் வழக்காற்று திருமணங்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றி மேலும் பார்க்கலாம்.

3. வழக்காற்று திருமணத்தை கண்டிய சட்டம் ஏற்றுக்கொள்கின்றதா?

இலங்கையில் கண்டிய சட்டத்தால் ஆளப்படுபவர்கள் கண்டிய சட்டத்தின் கீழ் பதிவு திருமணம் செய்தால் மட்டுமே சட்ட வலிதுடைமை உள்ளதாக கருதப்படும். இந்த பதிவுக்கான நடைமுறைகள் 1952ம் ஆண்டின் 44ம் இலக்க கண்டிய விவாக, விவாகரத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு வழக்காற்று திருமணங்கள் ஏற்கப்படுவதில்லை.

பொதுவாக இலங்கையின் மத்திய மாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள் கண்டிய சட்டத்தால் ஆளப்படுபவர்கள். இருவரும் கண்டிய சட்டத்தால் ஆளப்பட்டால் மட்டுமே கண்டிய சட்டத்தின் கீழ் பதிவு திருமணம் செய்ய முடியும்.

4. வழக்காற்று திருமணத்தை இலங்கையின் இஸ்லாமிய சட்டம் ஏற்றுக்கொள்கின்றதா?

இலங்கையில் இஸ்லாமிய சட்டத்தால் ஆளப்படுபவர்கள் பதிவு திருமணம் செய்வது பற்றிய நடைமுறைகளை 1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் உள்ளடக்கியுள்ளது.

இங்கும் இருவரும் இஸ்லாமிய சட்டத்தால் ஆளப்பட்டால் மட்டுமே அந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியும்.

இந்த சட்டத்தில் உள்ள ஒரு ஏற்பாடு இஸ்லாமிய சட்டத்தின் கீழ் வழக்காற்று திருமணத்தை ஏற்பதாக உள்ளது. அதாவது “திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்துக்காக அத்திருமணம் செல்லுபடியற்றதானது என கருதக்கூடாது” என்று விளம்பியுள்ளது.

முஸ்லிம் மக்கள் “நிக்காஹ்” சடங்கு நிறைவேற்றி செய்யப்பட்ட வழக்காற்று திருமணத்தை செல்லுபடியானதாக கருதுகின்றனர்.

5. வடமாகாணத்தில் வசிக்கும் மக்களின் தேசவழமை சட்ட திருமணம் செல்லுபடியானதா?

வழக்காற்று திருமணம் ஒன்றின் செல்லுபடியாகும் தன்மையை தீர்மானிக்க நீதிமன்றங்கள் வழக்காற்று சம்பிரதாயங்கள், சடங்குகளுக்கு அமைவாக திருமணம் நடைபெற்றுள்ளனவா என பார்க்கும். அதன் படி நடைபெற்றால் அவை சட்ட பூர்வமான திருமணமாக ஏற்கப்படும்.

வடமாகாணத்தில், இந்து மதகுரு முன்னிலையில் தாலி கட்டி, உறவினர்கள் முன்னிலையில் சமய சடங்குகள் இடம்பெற்றால் அந்த வழக்காற்று திருமணம் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என சூசைப்பிள்ளை எதிர் பார்வதிப்பிள்ளை வழக்கில் கூறப்பட்டது.

ரத்தினம்மா எதிர் ராசையா வழக்கில் தாலிக்கு பதிலாக மஞ்சள் கயிறு கட்டியமையும் ஏற்கப்படலாம் என கூறப்பட்டது.

6. தேசவழமை சட்டத்தால் ஆளப்படாத இந்து சமயத்தவரின் வழக்காற்று திருமணம் செல்லுபடியானதா?

இது தொடர்பாக நீதிமன்றங்கள் குறித்த பிரதேசத்தில் எவ்வகையான சடங்குகள் பின்பற்றப்படுகின்றனவோ அவற்றை நடைமுறைப்படுத்தி செய்யப்பட்ட வழக்காற்று திருமணங்கள் செல்லுபடியான திருமணங்கள் என கூறியுள்ளன.

பொன்னம்மா எதிர் ராஜகுலசிங்கம் வழக்கில் மட்டக்களப்பில் வாழும் தமிழர்கள் தமது திருமணத்தில் தாலி காட்டும் சடங்கை முக்கிய தேவைப்பாடாக கருதுவதில்லை என கூறப்பட்டது.

7. கிறிஸ்தவர்கள் தொடர்பான வழக்காற்று திருமணம் செல்லுபடியானதா?

தேவாலயத்தில் மதகுரு முன்னிலையில் சமயசடங்குகளை பின்பற்றி நடத்தப்பட்ட வழக்காற்று திருமணம் கூட சட்ட ரீதியானதாகும்.

8. கண்டிய சட்டத்தால் ஆளப்படாத பௌத்த சமயத்தவரின் வழக்காற்று திருமணம் செல்லுபடியானதா?

பௌத்தர்களுடைய வழக்காற்று திருமணத்தில் “போருவ” சடங்கு இடம்பெற்றால் அது செல்லுபடியான திருமணமாக கருதப்படும்.

சோபியாஹாமி எதிர் அப்புஹாமி வழக்கில், உறவினர்கள் முன்னிலையில் இருவருடைய கைகளும் கட்டப்பட்டு அவ்விரல்கள் மீது நீர் ஊற்றப்பட்டு “போருவ” சடங்கு இடம்பெற்றதால் அது வலிதான திருமணம் என நீதிமன்றம் கூறியது.

எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.

9. சுருக்கம்

மேலே கூறப்பட்ட விடயங்களுக்கு அமைவாக இலங்கையில் கண்டிய சட்டத்தால் ஆளப்படுபவர்களை தவிர ஏனைய உள்ளூர் சட்டத்தால் ஆளப்படுபவர்களுக்கு வழக்காற்று திருமணம் சட்ட வலிதுடைமை பெறும்.

சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டஎமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button