fbpx

ஒற்றை மர கதாநாயகன் – ஒரு பக்க கதை

மழைத்துளிகள் பூமியை இதமாக தொட்டுச்சென்ற ஒரு மாலைப் பொழுதில், என் சிறுகதைக்கு ஓர் கதாநாயகனைத் தேடினவளாய், ஊர் எல்லையில் இருக்கும் மலைஉச்சியை நோக்கி நடந்தேன்.

செல்லும் வழியெங்கும், இலைகளில் தங்கியிருந்த மழைத்துளிகளும், மழையை கண்டு வெட்கித்து தலைகுனிந்த பூக்களும், நீ எனக்காக தானே வந்தாய் என்ற ஆணவத்தோடு மழைக்கு விடைகொடுத்த மரங்களும், உன் சிறுகதைக்கு நான் கதாநாயகனாக மாட்டேனா என கேட்பது போலவே என்னைப் பார்த்து சிரித்தன.

அவற்றை கடந்து சற்று தொலைவில் தனியாக நின்ற ஓர் மரத்திடம் சென்று அமர்ந்தேன். சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தபின் அந்த ஒற்றை மரத்திடம் கேட்டேன், ‘நீ ஏன் இங்கு தனியாக இருக்கின்றாய்?” என்று. அதற்கு அந்த மரம் சொன்னது,’நானும் என்னுடைய அம்மாவும் அப்பாவும் இந்த அழகான மலைப்பிரதேசத்திலேயே சந்தோஷமாக வசித்து வந்தோம்.

எழில் கொஞ்சும் இவ்விடத்தை இரசிக்க பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இவ்விடத்திற்கு வருவது வழக்கம். எங்களோடு புகைப்படம் எடுப்பதற்காக என்றே பலர் எம்மை தேடி வருவார்கள். இப்படி சந்தோஷமாக இருந்த எங்களுடைய வாழ்வில் திடீரென ஓர் மாற்றம். சில நாட்களுக்கு முன்பு இவ்விடத்தை பராமரிப்பவர் இங்கு வந்தபோது, என்னுடைய அம்மாவும் அப்பாவும் மிகவும் வயதான தோற்றத்துடன் காட்சியளிப்பதினை அவர் அவதானித்தார்.

முன்பிருந்த பொழிவான தோற்றத்தை இழந்து, சோர்ந்து போயிருந்த என் பெற்றோரை அடுத்த ஒரு மணித்தியாலத்திற்குள்ளேயே என் கண் முன்பாகவே வெட்டி சாய்த்தார். செய்வதிறியாத நான் நடப்பது என்ன என்று புரிந்துகொள்ளும் அளவிற்கு பக்குவமானவனாக இருக்கவில்லை.

உயிர் பிரியும் நொடியில் என் தாய் என்னிடம், ‘மகனே, நானும் நீயும் இந்த பூமியில் படைக்கப்பட்டது எமக்காக அல்ல, வானத்து பறவைகளின் உறைவிடமாகவும், வனத்து விலங்குகளின் வதிவிடமாகவும், வாழும் உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் உணவாகவும், உயிர் மூச்சாகவும் வாழ்வதற்காகவே. நானும் அப்பாவும் உன்னை விட்டுப் போவதால் நீ வருத்தமடையக் கூடாது. நீ ஒற்றையில் சோகத்தில் நின்றாலும் உன்னை தேடி வருவோருக்கு உன் நிழல் சுகமானதாகவே இருக்க வேண்டும்.” என்பது தான்.

அதுவரை குடும்பமாக சந்தோஷமாக இருந்து பழகிய நான், அன்று முதல் தனியாக வாழ பழகிக்கொண்டேன். என்னுடைய அம்மா கூறியது போலவே, என் படைப்பின் அர்த்தம் என்ன என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இடத்திற்கு வந்து என் நிழலில் அமருவோர், ‘இந்த மரத்தடி நிழலில் அமர்ந்ததால் மனதிற்கு மிகவும் அமைதியாகவும் இதமாகவும் உள்ளது.” என்று சொல்லும் போது நான் அளவில்லாத மகிழ்ச்சியை அனுபவிக்கின்றேன்.

இங்கு வரும் பலரும் என் அம்மா அப்பாவின் இடம் வெறுமையாக இருப்பதைக் கண்டு கவலைப்படுவதுண்டு, அந்நேரங்களில் என் மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் இன்றும் அவர்களை பலர் நினைப்பதையிட்டு நான் பெறுமைப் பட்டுக்கொள்வேன்.

இப்படி நகர்ந்து சென்ற நாட்களில் நான் உணர்ந்துகொண்டது என்னவெனில், வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம், எம்மால் பிறர் அடையும் சந்தோஷம் தான் என்பது.”


இப்படி தன் கதையை சொல்லிமுடித்த அந்த ஒற்றை மரத்தை உற்றுப்பார்த்தேன், ‘உன்னைவிட சிறந்த கதாநாயகனை எங்கு சென்று தேடுவேன்?” என்ற முடிவிலும் வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் எது என்று தெரிந்துகொண்ட திருப்தியோடும் வீடு திரும்பினேன்.

இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button