fbpx

வாழ்க்கை ஒரு பூமராங்!

நீங்கள் யாராவதொருவருடைய‌ வாழ்க்கையை கெடுத்திருக்கிறீர்களா? யாருக்காவது தீங்கு இழைத்திருக்கிறீர்களா? யாருடைய மனதையும் காயப்படுத்தி இருக்கிறீர்களா? நாம் அனைவரும் இல்லை என்றே பதிலளிப்போம்.

ஆனால் யாரையாவது பழிவாங்கியிருக்கிறீர்களா அல்லது பழி வாங்கும் எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டால் சிலர் ஆம் என்றும் சிலர் இல்லை என்றும் கூறுவோம். பழி வாங்கும் எண்ணம் எமக்கு ஏற்பட்டாலே நாம் ஒருவருடைய வாழ்க்கையை அழிக்கத் திட்டமிடுகிறோம் என்பது அர்த்தமாகும்.

“இவனுக்கு செய்கிறேன் பார்” என்பது பழிவாங்கும் எண்ணத்தின் ஒரு ஆரம்பமாகும்.அவ்வாறு நாம் பல சமயம் மனதிற்குள் நினைத்திருப்போம், அது வெறும் நினைவாகவே இருந்து செயலற்றுப் போயிருந்தால் மிகவும் நன்று.ஏனெனில் நாம் எவருக்கும் தீங்கு இழைக்கவில்லை.

மாறாக அவ்வெண்ணம் செயலாக மாறும் போது ஒருவருடைய வாழ்க்கையை அழிக்கத் துணிகின்றோம். எவருடைய வாழ்க்கையையும் அழிக்கும் அதிகாரம் இவ் உலகில் எவருக்கும் இல்லை.

நாம் பழிவாங்கிய நபரை அல்லது அவருடைய குடும்பத்தை பழிவாங்கியதற்குப் பின்னர் கண்டிருக்கிறோமா? அல்லது பழிவாங்கும் போது அந் நபரையோ அல்லது குடும்ப அங்கத்தவர்களையோ அல்லது அவரின் பிள்ளைகளின் முகத்தைக் கண்டிருக்கிறோமா? அது மிகக் கொடுமையானது.

நாம் ஒருவருக்கு தீங்கு செய்யும் போது அவரின் வேதனை நிறைந்த முகமும் அழுத கண்ணீரும் ஆயிரம் கதை சொல்லும். ஒருவர் செய்த பிழைக்காக அவரின் மொத்த குடும்பமும் பிள்ளைகளும் எமது காலில் விழுந்திருப்பார்கள்.

எமது மன்னிப்புக்காக பல இரவுகள் நித்திரையை தொலைத்திருப்பார்கள். ஆனாலும் எமது இரக்கமற்ற கரம் அவர்களை நொருக்கியிருக்கும்.

நாம் பழிவாங்குகிறவர்கள் பெரும்பாலும் நலிந்தவர்களாகவும் பலவீனர்களாகவும் அல்லது கதைக்கத் திராணியில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். மனித இனத்திற்கு உரித்தான ஒரு கொடிய குணமாக இது இருக்கின்றது.

நாம் பழிவாங்க சில வேளைகளில் காரணம் இருக்கலாம், ஆனால் எம்முடைய செயல் ஒருவருடைய வாழ்க்கையை தொலைக்குமானால் அந்தப் பாவத்திற்கு நாம் வாழ்நாளெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவையுள்ளது.

எம்மால் வாழ்க்கையைத் தொலைத்த குடும்பம் அன்று பட்ட வேதனை சில நேரத்தில் தவறான முடிவுகளையும் எடுப்பதற்கு தூண்டும்.

இப் பாவம் எமக்கு வேண்டாம், ஒருவன் எமக்கு தீங்கு இழைக்கும் போதே நாம் பழிவாங்க உந்தப்படுகின்றோம். மாறாக நாம் அவனை மன்னித்து விட்டால் அதற்குப் பின்னரான காலங்களில் எங்கள் மனம் எப்படி பெருமிதமாக இருக்கும் என்பதை உணர்வோம்.

வாழ்க்கையில் ஒருவருக்கு நாம் செய்யும் தீங்கான காரியம் மறுபடியும் பூமராங்கைப் போல் எமக்கு வந்து சேரும் என்பதை மறக்கக்கூடாது. வாழ்க்கையில் நிரந்தர வெற்றியும் நிரந்தர தோல்வியும் இல்லை மாறாக இரண்டின் கலவையுமே வாழ்க்கையாகும்.

எமக்கு ஒருவனைப் பிடிக்காவிட்டால் அவனை விட்டு விலகுவதே சிறந்த வழியாகும். எமக்கென நாம் வைத்திருக்கும் கொள்கையில் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

நியாயத்தை எமக்கேற்றவாறு நாம் மாற்றிக்கொள்ளலாம், நாம் சொல்வதை எமது குடும்பமோ, நண்பர்களோ ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் காலத்தின் விளையாட்டு மாறுபட்டது, எமக்கு நாம் மட்டுமே நீதிபதிகள், எம்மால் மட்டுமே உண்மையை ஏற்றுக்கொள்ள முடியும்.

எமது பொய்களினால் எமக்கு ஒரு துன்பம் நிகழும் போது திருடனுக்கு தேள் கொட்டியதைப் போன்று வலியைப் பொறுத்துக் கொள்ளவேண்டியேற்படலாம். நாம் ஏன் வீணான துன்பங்களை அனுபவிக்க வேண்டும், நாம் இயன்ற மட்டும் நீதியுடன் நடந்து கொண்டால் அதற்கான பலனை அனுபவிக்க முடியும்.

தீமை செய்தவனுக்கு தீமையே செய்ய வேண்டும் என்பதில்லை. அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அல்லது மன்னித்தால் அவனுக்கு இரட்டிப்பான வேதனை ஏற்படும், தனது பிழையை உணர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும். பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பது எமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஒரு ஆப்பாகும்.

மற்றவனுடைய வாழ்க்கையை கெடுக்கபோய் அது எமக்கே ஆபத்தாக வந்து முடிந்த சந்தர்ப்பங்களும் உண்டு. நலிந்தவனின் கண்ணீருக்கு சக்தி அதிகம், அது சில நேரம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒருவன் எமக்கு தீமை செய்யும் அவனுக்கு நாமும் தீமை செய்தால் நாம் சாதாரண மனிதனாகின்றோம்.அவனை மன்னித்து விட்டுவிட்டால் நாம் பெரிய மனிதன் ஆகின்றோம். நாம் சாதரண மனிதர்களா? அல்லது பெரிய மனிதர்களா?

வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button