fbpx

அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 4(இறுதி பகுதி)

இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள்” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதன் முதல் பகுதி , இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி ஏற்கனவே வெளிவந்திருந்தது.

இறுதியாக இந்த பதிவில் மேலும் சில நிர்வாக சட்ட கோட்பாடுகளை ஆராய்கின்றோம்.

சட்டவாட்சி கோட்பாடு

நிர்வாகச்சட்டத்தின் பிரயோகத்திலும் சட்டவாட்சி கோட்பாடு முக்கியமானதாகும். சட்டமானது சகல மக்களையும் விட மேலானதாகும் என்ற சட்டவாட்சி தொடர்பான கருத்து எ.வி.டைசி அவர்களால் சட்டவியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிமுறை மீளாய்வில் இக்கோட்பாடு கவனத்திலெடுக்கப்படுதன் ஊடாக பொறுப்பு கூறல், பாரபட்சமின்மை, சுயாதீனமாக முடிவெடுக்காமை, நியாயமாக தீர்மானமெடுத்தல் போன்றவை சாத்தியமாகும்.

இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) சட்டத்தின் முன் யாவரும் சமன் என்றும் சகலரும் சட்டத்தினால் சமனான பாதுகாப்புக்குரியவர்களென்றும் கூறும். ஜெயவர்த்தன, சுரேந்திரன் ஆகிய வழக்குகளில் அரசியலமைப்பு உறுப்புரை 12(1) உடன் முரண்பட்டதன் மூலம் வரம்பு மீறல் இடம்பெற்றிருப்பதுடன் அடிப்படை உரிமைகளும் மீளவலியுறுத்தப்பட்டது.

நல்லாட்சிக் கோட்பாடு

நல்லாட்சிக் கோட்பாடென்பது சகலமக்களின் நம்பிக்கை, விருப்பு, நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை அறிந்து முன்னெடுக்கப்படும் ஆட்சியைக்குறிக்கும். இது சர்வதேச மனித உரிமைப்பிரகடனத்தின் உறுப்புரை 28ல் சுதந்திரமான உரிமைகளை முழுமையாக அடையக்கூடிய வகையில் சமூக, சர்வதேச அமைப்புகள் கொண்ட ஒரு சூழலில் வசிக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என கூறப்பட்டுள்ளது.

சமூக நடவடிக்கையில் மக்களின் பங்குபற்றல், நிலையான அபிவிருத்தி, சட்டவாட்சியை நிலைநிறுத்தல், லஞ்சம் ஊழல் ஒழிப்பு, பலவீனமான குழுக்களை பாதுகாத்தல் போன்றவை நல்லாட்சியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.

பொறுப்பு கூறல் கோட்பாடு

பொறுப்பு கூறல் கோட்பாடானது, நிர்வாக அதிகாரிகளின் தீர்மானங்கள் தொடர்பாக பொறுப்புகூற வேண்டியதன் கடப்பாட்டை வலியுறுத்தும். பொறுப்பு கூறலானது அரசியல் ரீதியானதாகவோ சட்டரீதியானதாகவோ இருக்கலாம்.

இக்கோட்பாடானது தற்றுணிபுக்கும் ஒருதலைப்பட்சமான செயலுக்குமிடையே தெளிவான வேறுபாட்டை கண்டறிய உதவும்;. தீர்மானங்களின் சட்டவலிதுடைமைக்கு பொறுப்புக்கூற நீதிமன்றம் தீர்மானமெடுத்தவர்களை அழைத்தல் நீதிமுறை மீளாய்வின் ஒரு அங்கமாகும்.

வலுவேறாக்கல் கோட்பாடு

வலுவேறாக்கல் கோட்பாடானது நிர்வாகத்துறையினரால் மிகையாக செய்யப்பட்ட அல்லது செய்யப்படாமல் விடப்பட்ட கடமைகளை அளவிடுதலில் பங்குவகிக்கும். அரசாங்கத்தின் மூன்று முக்கிய அமைப்புக்களான நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் தொழிற்பாடுகள் தெளிவாக வகைப்படுத்தப்பட்டிருப்பின் அதிகாரத்தை எல்லைமீறி பயன்படுத்தப்படும் நிலை ஏற்படாததுடன் அமைப்புக்களுக்கிடையே தடைகளும் சமன்பாடுகளும் கொண்ட நிலை காணப்படும்.

தடைகள் இல்லாத அதிகாரம் நம்பகத்தன்மையற்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். துறைகளுக்கிடையே பூரண வேறாக்கம் இருக்கவேண்டியது கட்டாயமல்ல.

உயர் நீதிமன்றங்கள், ஜனாதிபதி, அமைச்சர்கள், கையளியதிகாரம் பெற்ற அலுவலர்கள் சட்டங்களை உருவாக்கல், நிர்வாக நியாயசபைகள் நீதித்துறை போல் செயற்படல், நீதிமன்ற தீர்ப்பின் மூலமான தண்டனைகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கல் போன்ற செயல்களில் துறைகள் மாறுபட்ட செயலை செய்கின்றமை தெளிவாகின்றது.

நிர்வாக அதிகாரிகளின் முடிவுகளின் சட்டவலிதுடைமையை தீர்மானிப்பதற்கு வலுவேறாக்கல் கோட்பாடானது நிச்சயமான வழிகாட்டியாக அமையாததால் தற்போது நீதிமுறை மீளாய்வின் போது கடுமையாக பின்பற்றப்படுவதில்லை.

மேலே குறிப்பிட்ட கோட்பாடுகளினூடாக ஆளப்படும் நிர்வாகச்சட்டத்தினால் பெறக்கூடிய நிவாரணங்கள் தொடர்பாக ஆராய்வது அவசியமாகும். ஏற்கனவே நீதிமுறை மீளாய்வின் கீழ் அடிப்படை உரிமை தொடர்பான அதிகார வரம்புமீறல் பற்றியும் உயர் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பரிகாரங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இதனைவிட நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரால் (Ombudsman) பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்குவதற்கு சிபாரிசு செய்யும் அதிகாரமும் உண்டு.

அரசு நிர்வாகத்திற்;கெதிராக மக்களால் சமர்ப்பிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது இவரின் கடமையாகும். இப்பதவி இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 156ன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

எழுத்தாணை அதிகாரம்


மீறப்பட்ட உரிமைகள் தொடர்பாக எழுத்தாணை (Writ) அதிகாரம் மூலம் மேனிலை நீதிமன்றங்கள் நிவாரணம் வழங்குகின்றன. மேற்குறித்த எழுத்தாணை தொடர்பான சட்டப்பரிகாரங்கள் வௌ;வேறு சட்ட முறைகளுக்கமைவாக மாறுபடும்.

இலங்கையில் 1973ம் ஆண்டின் நீதிநிர்வாகச் சட்டம் ; அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் சபைக்கட்டளையின் (Council Order) பிரிவு 42ல் எழுத்தாணை நியாயாதிக்கம் உயர் நீதிமன்றத்திடம் இருந்தது. பின்னர் தற்போதைய அரசியலமைப்பில் உறுப்புரை 140 மற்றும்; 13ம் திருத்தத்தின் போது சேர்க்கப்பட்ட உறுப்புரை 154ஞ.(4) ஆகியவற்றில் எழுத்தாணை நியாயாதிக்க அதிகாரம் முறையே மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் மாகாணசபையினால் ஆக்கப்பட்ட நியதிச்சட்டம் தொடர்பாக மாகாண மேல் நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் எவரேனுமாளுக்கெதிராக உறுதிகேள் எழுத்ததாணை (Writ of Certiorari), தடையீட்டெழுத்தாணை (Writ of Prohibition), மேற்செல்லும் எழுத்தாணை (Writ of Procedendo), ஆணையீட்டெழுத்தாணை (Writ of Mandamus), யாதுரிமை எழுத்தாணை (Writ of Quo Warranto) மற்றும் ஆட்கொணர்வு எழுத்தாணை (Writ of Habeas Corpus) போன்ற கட்டளைகள் வழங்கப்படலாம். இவை முன்தீர்ப்புத்தடை, வழக்கிடு தகைமை, கால அளவு மற்றும் வழக்கின் நிகழ்வுகள் போன்ற பொதுவான விதிகளுக்குட்பட்டதாகும். அதிகாரவரம்பு மீறப்பட்டு 3 மாத காலத்தினுள் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென பொதுவாக கூறப்படும். மலல்கொடபிட்டிய கூட்டுறவு சங்க வழக்கில் நியாயப்படுத்தமுடியாத தாமதம் (Undue Delay) இடம்பெற்றதால் எழுத்தாணை வழங்கப்படவில்லை.


கீழ்நிலை நீதிமன்றங்கள் அல்லது நியாயசபைகள் அதிகார வரம்பை மீறி செயற்பட்டாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ உறுதிகேள் எழுத்தாணை பயன்படுத்தப்படலாம். இதன்போது குறித்த உத்தரவுகள் வெற்றானது என மேனிலை நீதிமன்றங்கள் கூறும்.

தடையீட்டெழுத்தாணையும் இதனையொத்த தன்மையுடையது. இங்கு கீழ்நிலை நீதிமன்றங்கள் அல்லது நியாயசபைகள் தங்கள் முன்னுள்ள வழக்குகளில் அல்லது பிரச்சினைகளில் தங்களது அதிகார வரம்பை மீறிச்செல்லாமல் ஆரம்பத்திலிருந்து தடுக்கும்.

பெரேரா வழக்கில் மாணவியொருவர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான தகைமைகளை கொண்டிருந்த போதும் பட்டம் வழங்க மறுத்து வெளியிட்ட தீர்மானம் உறுதிகேள் எழுத்தாணை மூலம் வெற்றாக்கப்பட்டது. சரக்குக்கப்பல் தொடர்பாக அரச திணைக்களமொன்றினால்; மேலதிக வரி மற்றும் சேவைக்கட்டணம் அறவிடுவதற்கான தீர்மானம் அதிகாரவரம்பு மீறல் எனப்பட்டது

பொது அதிகார அமைப்புக்கள் தமது கடப்பாட்டை செய்யத்தவறுமிடத்து அதனை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தும் கட்டளை ஆணையீட்டெழுத்தாணையாகும். அப்துல் மஜீத் வழக்கில் பிரதேசசபை தவிசாளர் உபவிதியை தவறாக பொருள்கோடல் செய்து நபரொருவருக்கு வியாபார உரிமம் வழங்க மறுத்தபோது நீதிமன்றம் ஆணையீட்டெழுத்தாணை வழங்கியது.

சண்முகரட்ணசர்மா வழக்கில் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) உறுப்புரைகள் 6,7,8,9 மற்றும் 10 ஆகியவற்றின் மீறல் தொடர்பாக நிவாரணமாக குறித்த தொகைப்பணம் கொடுக்கப்படுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சட்டமாஅதிபரின் பிரதிநிதியால் கூறப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட தொகை வழங்கப்படாமையால் ஆணையீட்டெழுத்தாணை வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் 2007ல் நடைமுறைக்குவந்த எமது நியதிச்சட்டத்தில் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் ஏற்பாடுகள் முழுமையாக புகுத்தப்படவில்லை எனக்கூறி எழுத்தாணை மறுக்கப்பட்டது.

யாதுரிமை எழுத்தாணை விண்ணப்பமானது அதிகார பதவியிலுள்ளவர் முறைப்படியான சட்டங்களின் கீழ் அதற்கான தகுதியை பெற்றள்ளாரா என்பதை கேள்விக்குட்படுத்தும். கீதா குமாரசிங்க வழக்கில் இரட்டை குடியுரிமை பெற்றவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியுமா என சந்தேகம் வெளியிடப்பட்டது.

இது அரசியலமைப்பின் 19ம் திருத்தத்தின் உறுப்புரை 91(1)(ஈ)(ஒiii) ன் படி சட்டவலிதற்றதென கூறப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற மேன்முறையீட்டிலும் குறித்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
அடிப்படைவாழ்வு மற்றும் சுதந்திர உரிமை மீறப்படும் போது அல்லது சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள போது ஒருவரை பாதுகாப்பதற்கு ஆட்கொணர்வு எழுத்தாணை பயன்படும்.

ஆரம்பத்தில் நிர்வாக அதிகாரசபைகளுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பு சிக்கல் நிறைந்ததாக காணப்பட்டது. சமூகத்தின் வளர்ச்சியுடன் சிக்கல்நிலை மேலும் அதிகரித்ததுடன் பல புதிய சவால்களையும் தோற்றுவித்தது. இச்சிக்கல் நிலையைப்போக்குவதற்கும் அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கும் நிர்வாகச்சட்டம் வழிவகை செய்தது.

இதனூடாக அரசாங்கத்தினது பரந்து விரிந்த நிர்வாகத்துறையினரின் பணிகளை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு அரச நிர்வாகத்துறையினர் சட்டத்திற்கமைவாகவும் நியாயமாகவும் தொழிற்படுவதற்கான வழிகாட்டும் கோட்பாடுகள் இச்சட்டத்திலிருந்து தோற்றம் பெற்றவையாகும்.

அவர்களுக்கு சட்டத்தினால் வழங்கப்படும் அதிகாரங்கள், கடமை, தற்றுணிபு அதிகாரத்தை நிறைவேற்றும் வழிமுறைகள் என்பன பற்றியும் அவை மீறப்படுவதால் ஏற்படும் விளைவுகள், நிவாரணங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக விருத்தியடைந்துவந்த நிர்வாகச்சட்ட கொள்கைகள் மற்றும் தீர்ப்புச்சட்டங்களினூடாக புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

(முடிந்தது)

சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button