பாலியல் குற்றங்கள் என்றால் என்ன?
பாலியல் குற்றங்கள் என்றால் என்ன? – சட்ட விளக்கம்
இலங்கையில் பாவனையில் உள்ள குற்றவியல் சட்டங்கள் தொடர்பான தொடரில் தற்பொழுது பாலியல் குற்றங்கள் தொடர்பில் ஆராயப்படுகின்றது. மக்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை இலகுவான முறையில் புரிய வைப்பதே எங்கள் பதிவுகளின் நோக்கமாகும். குற்றவியல் சட்டங்களில் மிகமுக்கியமானது தண்டனை சட்ட கோவையாகும்(Ceylon Penal Code). இதனை இந்த இணைப்பில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் . குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் போது அவரிடம் கேட்பது என்னவெனில் நீர் …………..ஆந் திகதியன்று ……. இரவு ………… மணியளவில் ……………எனும் பெண்ணின் பெண்மை நலத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் மீது தெரிந்தே குற்றமான வன்செயலை புரிந்து இலங்கை தண்டனை சட்டகோவையின் 345ம் பிரிவின் கீழ் குற்றத்தை செய்திருக்கிறீர். இதற்கு நீர் குற்றவாளியா? இல்லையா? என்ற பொருள்பட குற்றசாட்டு பாத்திரத்தை வாசிப்பது வழக்கம்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேற்படி தண்டனை சட்டகோவை பற்றியோ, அதிலுள்ள 345ம் பிரிவை பற்றியோ எதுவும் தெரிந்திருக்காது. அனால் அந்த குற்றச்சாட்டுக்கு பதில்கூற வேண்டும். அதன் பின்னரே விசாரணை தொடங்கும். இதிலிருந்து விளங்குவது என்னவெனில் ஒவ்வொரு பிரஜையும் மேற்படி சட்டகோவையை பற்றி அறிந்திருத்தல் முக்கியமானது என்பதாகும் .
1. குற்றத்தை விசாரிக்கும் நடைமுறைகள்
குற்றம் சாட்டப்பட்டவரின் பதிலை அடுத்து அவர் சுற்றவாளி என கூறியிருந்தால் குற்றம் விசாரிக்கப்படும். விசாரணையானது மேல் நீதி மன்றத்திலா? அல்லது நீதவான் நீதிமன்றத்திலா என்பது பற்றியும் மற்றும் விசாரணையில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றியும் இலங்கையின் குற்றவியல் நடபடிகோவை எடுத்துக்கூறும் .
2. குற்றத்தை நிரூபித்தல்
குற்றத்தை நிரூபிக்க அதற்கு தக்க ஆதாரம் வேண்டும். அவ்வாதாரம் வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமானதாகவோ இருக்கலாம். இச்சாட்சியத்தை பற்றி கூறுவது சான்றியல் கட்டளைசட்டமாகும். சான்றியல் சட்டப்படி சிறுபிள்ளை முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமென்றாலும் சாட்சியமளிக்கலாம். உடல் ரிதியாக இயலாமை உள்ளவர்கள் சைகைகள் மூலம் சாட்சியமளிப்பதுண்டு. குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி, உறவினர் கூட சாட்சியமளிக்கலாம்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கெதிராக அரசுத்தரப்பு சாட்சியங்களை முன்வைக்கலாம். புலன் விசாரணையின் போது அவர்களுக்கு கிடைத்த தகவல்களை நீதிமன்றில் சாட்சியமாக முன்வைக்கலாம்.
3. தண்டனை தீர்ப்பு
வழக்கு விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவருக்கெதிராக உள்ள குற்றசாட்டுகளை சாட்டப்பட்டவருக்கெதிராக சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளார்கள் என நீதிமன்றம் திருப்திப்பட்டால் தண்டணை விதிக்கப்படும்.
எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.
4. கற்பழிப்பு குற்றம் என்றால் என்ன?
பொதுப்படையாக கூறும்போது பின்வரும் செய்கைகளில் ஈடுபடுகின்ற ஒருவன் கற்பழிப்பு(Rape) செய்ததாக குற்றம் சாட்டப்படுவர். இது நாடுகளுக்கு நாடு வேறுபடும்.
1. அவரது ஆண்குறியை பெண்குறி, அல்லது பெண்ணின் ஆசனவாயில் நுழைப்பது
2. ஆண்குறி அல்லாத பொருள் எதனையும் அல்லது உடலின் ஒருபகுதியை பெண்குறி, அல்லது பெண்ணின் ஆசனவாயில் நுழைப்பது
3. ஆண்குறியை பெண்ணின் உடலின் ஏதேனும் பகுதியில் நுழைப்பது
4. அவனது வாயை பெண்ணொருத்தியின் பெண்குறி, ஆசனவாயில் பொருத்துவது
5. மேற்படி செயல்களை அவளை அவ்வாறு நுழைக்கும்படி கட்டாயப்படுத்தல், வேறு எந்த நபருடனும் அச்செயல்களை செய்யுமாறு கூறுவது
இலங்கை தண்டனை சட்டகோவையின் 363ம் பிரிவின் கீழ் ஒரு ஆணின் இயற்கையான ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழைந்தால் மட்டுமே அது கற்பழிப்பாக கருதப்படும். இது எமது சட்டத்தில் கற்பழிப்பு தொடர்பான சட்டத்தை குறுகிய நோக்கில் அணுகுவதாக உள்ளது.
கீழே விவரிக்கப்பட்ட ஏதேனும் சூழ்நிலைகளில் ஏற்கனவே கூறப்பட்டவை நடக்குமிடத்து அது கற்பழிப்பாக கருதப்படும்.
A . பெண்ணின் விருப்பமில்லாது அவ்வாறு செய்தல்
B. பெண்ணின் சம்மதமில்லாது அவ்வாறு செய்தல்
C. மரணம் அல்லது காயம் ஏற்படும் என்று அச்சுறுத்தி அவளின் சம்மதத்துடன் செய்தல்
D. மனநிலை பாதிக்கபட்ட நிலையில், மது அருந்தியுள்ள நிலையில், வேறு பொருளால் ஏற்பட்ட மயக்கத்தில் உள்ளபோது எதற்கு சம்மதம் அளிக்கின்றோம் என்று தெரியாத நிலையில் வழங்கப்பட்ட சம்மதத்துடன் செய்தல்
E. ஒரு பெண் ஆணொருவரை தவறாக கணவன் என எண்ணி சம்மதம் வழங்கும் நிலையில் தான் அப்பெண்ணின் சட்ட பூர்வமான கணவன் அல்ல என தெரிந்தும் அவ்வாறு செய்தல்
F. பதினாறு வயதுக்குட்பட்ட பெண்ணுடன் அவளின் சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ உடலுறவு கொள்வது
மேலும் சம்மதம் என்பது தனிச்சையானதாக இருக்க வேண்டும். குறிப்பிடட உடலுறவு செய்கையில் ஈடுபடுவதற்கு பெண்ணொருத்தி வார்த்தைகள், சைகைகள், வார்த்தையில்லாத தொடர்பு, விருப்பங்கள் மூலம் தெரிவித்தால் வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நுழைத்தலை செய்யும் செய்கையை பெண்ணொருத்தி உடல்ரீதியாக தடுக்கவில்லை என்பதற்காக உடலுறவுக்கு சம்மதித்தாள் என கொள்ளக்கூடாது.
5. பிடியாணை இன்றி கைது செய்யலாம்
மேற்படி குற்றத்தை செய்தவரை பொலிசார் பிடியாணையின்றி கைது செய்யலாம். மேலும் ஆரம்பித்திலேயே பிடியாணை(Arrest Warrant) வழங்கலாம். அழைப்பாணை(Summon) அனுப்பி அதன்பின்னர் பிடியாணை வழங்கவேண்டும் என்ற நியதியில்லை.
6. பிணையில் வெளிவர முடியுமா?
இக்குற்றத்தை செய்தவருக்கு பிணை வழங்குவது நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது. சந்தேகநபர் மறைந்துகொள்ளுதல், சாட்சியத்தை அழிக்க சாத்தியக்கூறு இருத்தல், சாட்சியம் கூறுபவர்களை பயமுறுத்தல், சமூகத்தில் குழப்பங்கள்வரலாம் போன்ற காரணங்கள் இருப்பின் பிணை மறுக்கப்படும்.
7. இக்குற்றத்துக்குரிய தண்டணை என்ன?
அதிகபட்சமாக 20வருடம் கடூழியசிறைத்தண்டணை வழங்கப்படுவதுடன் குற்றப்பணம் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு செலுத்துமாறும் கட்டளை இடப்படலாம்.
மேற்படி பதிவில் உள்ள தகவல்கள் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான நிலையம் வெளியிட்ட “சட்டமும் நீங்களும்” எனும் கையேட்டில் குறிப்பிடப்பட்ட விடயங்களை உள்ளடக்கியது. குற்றவியல்சட்டம் தொடர்பான சட்டவாக்கங்களை பெற இலங்கை நீதி அமைச்சின் லா- நெட் இணையதளத்தை நாடமுடியும்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.