ஆறுதலால் ஆபத்தா?
“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்று சொல்லக் கேள்விப்பட்டதுண்டு, இன்றும் இது இவ்வாறு தான் உள்ளதா?
அடிப்படையிலிருந்து ஒவ்வொரு கட்டமாக பார்த்தால். கட்டிளமைப் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் சமூகத்தில் பல்வேறு விதமான சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும், அனுபவம் என்ற ஒன்று கொஞ்சமும் இல்லாத சூழ்நிலையில், அவர்கள் தம் பெற்றோரிடம் அடைக்கலம் தேடுவர்.
அப்போது அந்த பிள்ளைகளின் பிரச்சிணைகளுக்கு செவிகொடுக்க பெற்றோர்களுக்கு நேரம் இல்லாமல் போகுமெனில், பெற்றோர் தர வேண்டிய ஆறுதலை அந்த பிள்ளைகள் வெளியில் தேட ஆரம்பிக்கின்றனர். இந்த இடத்தில் தான் பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. ஆறுதலுக்காக ஏங்கும் பிள்ளையிடம் யாராவது கொஞ்சம் அன்பாக பேசியவுடன், அவர்கள் நல்லவரா கெட்டவரா என்பது தெரியாமலேயே அவர்களிடம் ஏமாந்து போய்விடுகின்றனர்.
ஆறுதலே ஆபத்தாகி அப்பிள்ளையின் வாழ்க்கையே வீணாகிவிடுகிறது. இப்போது அந்த பெற்றோர்கள் “என் பிள்ளைக்காக” என்று உழைப்பதில் என்ன பயன்? தன் பிள்ளை என்ன செய்கிறான்? யாருடன் பேசிகின்றான்? அவனுடைய நண்பர்கள் யாவர்? அவனுக்கு என்ன பிரச்சிணை என்று தேடிப்பார்த்து ஆறுதல்கூற நேரமில்லாத பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாவதற்கு முதற்காரணம்.
அடுத்த கட்டம் கணவன் மனைவியின் உறவு நிலை. இன்றைய சூழலில் இது மிக மோசமான நிலையில் உள்ளது என்றுதான் கூற வேண்டும். இதுவும் ஆறுதலால் ஏற்பட்ட ஆபத்து தான். நம் பிரச்சிணைகளுக்கான தீர்வினை தம் இருவருக்கு இடையில் தேடாமல் மூன்றாம் நபரிடம் ஆறுதல் தேடுவதால் வரும் விளைவு இது. ஆரம்ப காலத்தில் வேலைக்கு செல்லும் போது, சக ஊழியர்களுடனான தொடர்பு வேலைத்தளத்தோடு முடிவடைகிறது.
ஆனால் இன்று சமூக வலைதளத்தின் உதவியோடு சக ஊழியர் மற்றும் முகம் தெரியாத பலருடனான நட்பு 24 மணித்தியாலமும் தாரளமாக உள்ளது. வேலையில் இருந்து வீடு திரும்பும் கணவனுக்கோ மனைவிக்கோ தன் வாழ்க்கைத்துணையின் அன்றைய நாள் எப்படி இருந்தது என்று கலந்துரையாடவோ, சந்தோஷங்களை பகிர்ந்துகொள்ளவோ, ஒருவர் ஒருவரின் பிரிச்சிணைகளை தீர்க்க உதவி செய்யவோ, ஆறுதல் கூறவோ நேரமில்லை.
அவரவர்க்கு அவரவர் பாடு. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் சிறியதேனும் ஒரு மனக்கசப்பு உருவாகுமிடத்து அது உடனே சமூக வலைதளத்தில் பதிவேற்றப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் எம்மனங்கள் ஆறுதலுக்காக ஏங்குவதே. இதனை பார்க்கும் மூன்றாம் நபர்கள் அல்லது சக ஊழியர்கள் அடுத்த நாள் எமக்கு ஆறுதல் கூற முன்வருவர். நாம் எதிர்பார்த்ததும் இதைத் தானே.
இந்த ஆறுதலில் ஆரம்பமாகும் நெருக்கம், என் மனைவியைவிட, என் கணவரைவிட இவர் என்னை புரிந்துகொள்கின்றாரே என்ற எண்ணம் உருவாகும். இதனால் அவர்களுக்காக நாம் ஒதுக்கும் நேரம் அதிகமாகி, தங்களுக்கென்று ஓர் குடும்பம் இருக்கின்றது, திருமணம் என்பது ஓர் புனிதமான பந்தம் என்பது சுத்தமாக மறந்து போய், திருமணங்கள் இன்று அர்த்தமற்றதாக மாறுகின்றது.
இங்கு ஆறுதல் தேடிய குடும்பம் மட்டுமல்ல ஆறுதல் கூறிய குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் இந்த ஆறுதல் தானே, ஏன் அதனை தமக்குள் பகிர்ந்துகொள்ளக்கூடாது? எவ்வளவு வேலைப்பளுவாக இருந்தாலும் தன் கணவருக்காக, தன் மனைவிக்காக நேரம் ஒதுக்கி அன்பாக ஆறுதலாக பேச தவறும் எந்த குடும்பமும் இன்று இந்த நிலைக்கு தான் முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
ஒருவருக்கு நாம் கொடுக்கக்கூடிய உன்னதமான பரிசு எங்கள் நேரம் தான். இதனை கொடுக்க நாம் தயாராக இருந்தால் மூன்றாம் நபரின் ஆறுதலால் வரக்கூடிய ஆபத்துக்களை தடுக்கலாம். கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும், பிள்ளைகளுக்கு பெற்றோரும், பெற்றோருக்கு பிள்ளைகளும் ஆறுதலாக இருந்தால் குடும்பங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும்?
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனிகுமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.