பணத்தை கையாள்வது எப்படி?
பணத்தை கையாள்வது எப்படி ?
பணத்தை எப்படி கையாள்வது என்பது ஒரு மிக முக்கியமான விடயமாகும். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நிதியியல் முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் சாதாரண மக்களுக்கு புரிய வைப்பதே எமது பதிவுகளின் நோக்கமாகும்.
அதில் முதல் பதிவாக பணத்தை சிறந்த முறையில் எவ்வாறு கையாளமுடியும் என பார்ப்போம். நீங்கள் பணத்தில் ஒழுக்கமாக(Discipline) இல்லை என்றால் வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்வார்கள். ஏனெனில் பணம் எனும் எண் தொடர்பான விடயத்திலேயே ஒழுக்கம் இல்லாத போது எண்கள் தொடர்புபடாத வாழ்க்கையின் மற்றைய விடயங்களில் எவ்வாறு ஒழுங்கை பேண முடியும்? இதனால் தான் நிதியியல் ஒழுக்கம் வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கியமானதாகும்.
இங்கு பணத்தை கையாள்வது பற்றிய 5 முக்கிய உத்திகள் தரப்படுகின்றன. இவற்றை சரியான முறையில் பின்பற்றுமிடத்து உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை அவதானிக்கமுடியும்.
1.எந்த செயலுக்கும் பட்ஜெட் தயாரியுங்கள்
இது பொதுவாக வீட்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் தயாரிப்பது பொருத்தமானதாகும். பட்ஜெட் தயாரிக்கும் போது செலவுகளை எவ்வாறு சுருங்குவது அல்லது நீட்டுவது தொடர்பாக ஒரு அபிப்பிராயம் கிடைக்கும். வெளியில் சாப்பிடுதல், உடுப்புகள் வாங்குதல், பொழுதுபோக்கு, மாத வாடகைகள், தவணைப்பணம், அத்தியாவசிய செலவுகள், மருத்துவ செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கி பட்ஜெட் தயாரிக்கப்படல் வேண்டும். இதுவே பண ரீதியான ஒழுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் படியாகும்.
2. தினமும் உங்கள் வரவு செலவு கணக்குகளை எழுதி வையுங்கள்
கணக்குகளை எழுதி வைக்கும் போது எங்கெல்லாம் கூடுதல் செலவாகின்றது என்பதை புரிந்து கொள்ளமுடியும். பொதுவாக 95% மான மக்கள் வரவு செலவு எழுதுவதில்லை. வரவு எவ்வளவு செலவு எவ்வளவு எனத்தெரியாமலே பலருக்கு வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும். இந்த முறையை நீங்கள் மாற்றியாமைக்க வேண்டும். கணக்கு எழுதாமல் வாழ்க்கையில் பணக்காரராக மாறிய எவரையும் பார்க்கமுடியாது.
வரவு செலவு கணக்கு எழுதி வைத்தலிலும் ஒரு ஒழுக்கம் பேணப்படவேண்டும். அதாவது இடைக்கிடை எழுதுவதால் எவ்வித பயனும் இல்லை. தொடர்ந்து எழுதிவருமிடத்து பண ரீதியில் ஏற்படும் மாற்றத்தை உணரமுடியும்.
எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.
3. செலவுகளை வகைப்படுத்துங்கள்
எழுதிவைத்த கணக்குகளில் இருந்து செலவுகளை வகைப்படுத்துங்கள். அதாவது தினமும் எழுதிய கணக்குகளில் இருந்து குறித்த மாதத்தில் பெட்ரோலுக்கு செலவாகிய தொகை, ரீலோட் கட்டணம், பொழுதுபோக்கு செலவு போன்று பிரிவுகளாக வகைப்படுத்தவேண்டும். இவ்வாறு வகைப்படுத்துவதன் மூலம் எதற்கு கூடிய பணம் செலவாகின்றது என அறிந்துகொள்ளமுடியும். இதிலிருந்து எந்த வகையில் செலவை குறைத்து கட்டுப்படுத்த வேண்டும் என ஊகிக்கமுடியும்.
ஒரு கப்பல் மூழ்குவதற்கு பெரிய விபத்து இடம்பெற வேண்டுமென்றில்லை. ஒரு சிறு துவாரம்கூட போதுமானது. அவ்வாறே எந்த வகைப்பிரிவில் அதிகம் செலவாகின்றது என கண்டுபிடித்து கட்டுப்படுத்துதல் முக்கியமானது.
4. கடித உறை உத்தி
ஒரு மாதத்தில் வெவ்வேறு விதமான செலவுகளுக்கு வெவ்வேறு கடித உறைகளை பயன்படுத்தும் உத்தி முக்கியமானது. அதாவது ஒவ்வொரு வகை செலவுகளுக்கும் தனித்தனி கடித்த உறையுள் குறித்த மாதத்தில் செலவு செய்யக்கூடிய அதிகுறைந்த பணத்தை இட்டு வைக்க வேண்டும். அதனையே குறித்த வகை செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த முறையை கண்டிப்புடன் பின்பற்றிவர வேண்டும். இதன் மூலம் குறிதளவு பணத்தை சேமிக்கவும் முடியும்.
5.பணம் தொடர்பான தீர்மானங்களில் உணர்வுகளை பிரயோகிக்காதீர்கள்
பணம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது எந்தவித உணர்வுகளையும் அதில் தலையிட அனுமதிக்கக்கூடாது. பணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொது தர்க்கரீதியாக சிந்தியுங்கள்.
6.மேலதிக உத்திகள்
A.தொலைபேசி பிற்கொடுப்பனவு(Postpaid) முறையில் அதிகசெலவு ஏற்படுகின்றதெனின், உடனடியாக முற்கொடுப்பனவு(Prepaid) முறைக்கு மாறவேண்டும்.
B.எந்தவொரு பொருளையும் வாங்குமுன் அதன் விலையை வேறு விற்பனையாளர்களிடமும் ஒப்பிடுப்பாருங்கள். தற்போது இணையத்தளம் மூலமே விலை வேறுபாடுகளை அறியமுடியும். “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” போன்ற சலுகைகளில் மயங்காமல் இருத்தல் அவசியம்.
C.பொருட்களை வாங்கும் போது பட்டியலிட்டு வாங்குவது நல்லது. தேவையில்லாத பொருள் வாங்குவதை தவிர்க்கவும், தேவையான பொருள் தவறவிடப்படுவதை தடுக்கவும் இது உதவும்.
D.பொருட்களை வாங்கும் போது டெபிட் கார்ட் மூலம் கொள்வனவு செய்தால் ஏதேனும் சலுகைகள் இருக்கின்றனவா என ஆராய வேண்டும். போதுமான அனுபவம் இல்லாத போது கடனட்டை(Credit Card) பாவிப்பதை தவிர்ப்பது சிறந்தது. கடனட்டையை எவ்வாறு சிறந்த முறையில் பாவிப்பது தொடர்பான பதிவு எதிர்வரும் நாட்களில் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
E.புகைபிடித்தல், மதுவருந்துதல் போன்ற உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் அதிக பணத்தை செலவுபண்ணச்செய்யும். இதனை கட்டுப்படுத்துவதற்கு குறித்த தனி நபர்களே தீர்மானமெடுக்கவேண்டும்.
F.ATM பயன்படுத்தி பணம் எடுக்கும் போது ஒவ்வொருமாதமும் எதனை தடவை மட்டும் தான் பணம் எடுக்கவேண்டும் என ஏற்கனவே தீர்மானிக்கவேண்டும்.
G.குறித்த சிலநாட்களை செலவு செய்யாத நாட்களாக தெரிவுசெய்யுங்கள். அத்துடன் ஒவ்வொரு வாரமும் குறிதளவு பணத்தை சேமிக்க பழகிக்கொள்ளுங்கள்.
H.மருத்துவகாப்புறுதி பெறுவதன் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவுகளை கட்டுப் படுத்தலாம். உங்கள் வருமான நிலையைப்பொறுத்து இதனை தீர்மானிக்கலாம்.
எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.