சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை – பகுதி 3
பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி, இரண்டாவது பகுதி ஏற்கனவே வெளிவந்திருந்தது. இன்று அதன் மூன்றாவது பகுதி வெளிவருகின்றது.
சர்வதேச சட்டத்தின் கீழ் எவ்வகையான செயற்பாடுகளுக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் என தீர்மானிப்பதே ஐ.எல்.சி வரைவு ஆவணத்தின் நோக்கமாகும்.
ஐ.எல்.சி உறுப்புரை 10ன் படி கிளர்ச்சி மூலம் புதிய அரசாங்கம் அல்லது புதிய நாடு தோற்றம் பெறும் போது அதன்பின்னரான செயற்பாடுகள் சர்வதேச ரீதியாக புதிய அரசின் செயல்களாகவே கருதப்படும்.
ஜுகர் வழக்கில் கிளர்ச்சிப்படையினரால் நிகழ்த்தப்பட்ட வெளியேற்றத்திற்கு நட்டஈடு வழங்குமாறு தீர்க்கப்பட்டது. ஷோட் வழக்கில் கிளர்ச்சி சூழ்நிலை காரணமாக ஓருவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படின் அரசுக்கெதிராக சாட்டப்படலாம் என கூறப்பட்டது.
எனினும் இதில் சில மட்டுப்பாடுகளும் காணப்படும். ரான்கின் வழக்கில் புரட்சியின் பின் வெளியேறியமை நிரூபிக்கப்படாமையால் அரசு பொறுப்பாகாது எனப்பட்டது.
ஐ.எல்.சி உறுப்புரை 11ன் படி ஒரு நாடு தான் செய்த செயலை ஏற்றுக்கொண்டால் அது சர்வதேச ரீதியாக அரசின் நடத்தையாவதுடன் அதே வேளை அது குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கமுடியாதாகவும் இருக்கும். ஈரானியன் கொஸ்ரேஜ் வழக்கில் அமெரிக்க தூதரகம் மீதான ஆரம்பத்தாக்குதலை மேற்கொண்ட குழு அரசின் முகவரல்ல என்பதால் ஈரான் மீது குற்றச்சாட்டை சுமத்தமுடியாது.
ஆனால் பின்னர் தாக்குதல் நடத்துவதற்கு சில குழுக்களுக்கு அனுமதி வழங்கியமை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்த்தது.
மேலே குறிப்பிட்ட ஐ.எல்.சி உறுப்புரைகள், வழக்குகளிலிருந்து அரச அதிகாரிகள், அரசின் சார்பாக செயற்படுபவர்கள், அரசின் முகவர்கள், அரசுடன் தொடர்புபட்ட குழுக்கள் ஆகியவர்களின் செயல்களில் அரசு பொறுப்பு கூறவேண்டிய சர்ந்தப்பங்கள் விபரிக்கப்படடுள்ளன.
தொடர்ந்து அரசினால் செய்யப்படும் சில தவறுகள் வரையறுக்கப்பட் நிபந்தனைகளில் சர்வதேசச் சட்டத்தில் பாதுகாப்பு பெறமுடியும். சம்மதம், எதிர்பாராத சூழ்நிலைகள், தற்பாதுகாப்பு, எதிர்நடவடிக்கைகள், அவசியத்தேவை, அதீத துயரம் போன்றவற்றுக்காக செய்யப்பட்ட தவறுகளுக்கு எதிர்வாதமாக பயன்படுத்தலாம்.
குறித்த தவறான செய்கைக்காக அரசு சம்மதம் (Consent) தெரிவித்திருக்கும் சர்ந்தப்பம் இதுவாகும். போருக்கு இன்னொரு நாட்டுக்கு படைகளை அனுப்புவதை உதாரணமாகக் கூறலாம். தற்பாதுகாப்பு(Self Defense) தொடர்பான விடயங்கள் சர்வதேச வழக்காற்றுச் சட்டத்திலும் காணப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் ; உள்ளார்ந்த உரிமையாக ஏற்கப்பட்டுள்ளது.
எனினும் ஐ.எல்.சி விளக்கவுரையில் தற்பாதுகாப்பு மனிதஉரிமைகள் சட்டம், மனிதாபிமானச்சட்டம் போன்ற வரையறைகளுக்கட்பட்டது என கூறும். எதிர் நடவடிக்கைகள் (Countermeasures) பொதுவாக பழிவாங்கும் எண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
கொப்சிகோவோ வழக்கில் எதிர் நடவடிக்கைகள் நிச்சயமாக மற்றைய நாடு செய்த தவறுகைக்கு எதிரானதாக இருக்கவேண்டும் என கூறப்பட்டது. ஐ.எல்.சி உறுப்புரை 49ல் பாதிக்கப்பட்ட தரப்பே இந்த உரிமையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தும்.
தரப்பினருடன் இராஜதந்திர உறவை முறித்துக்கொள்ளல், நாடுகள் கூட்டாக தடைகளை ஏற்படுத்துதல் போன்றவற்றினூடாகவும் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். நமீபியா வழக்கில் தென்னாபிரிக்கா விதிக்கப்பட்ட கடப்பாடுகளை பின்பற்ற தவறியமைக்காக ஐக்கிய நாடுகள் சபை தடைகளை அறிவித்தது.
எதிர்பாரா சூழ்நிலைகளில்(Force majeure) அரசின் கட்டுப்பாட்டுக்கப்பால் செய்யப்பட்ட தவறான செயலுக்கு பாதுகாப்புப் பெறமுடியும். சேர்பியன் லோன் வழக்கில் 1ம் உலகப்போர் காரணமாக சேர்பியா கடனைச் செழுத்துவது சாத்தியமற்றது என தீர்க்கப்பட்டது.
அதீத துயரத்தின்(Extreme Distress) காரணமாக நபரொருவர் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் செய்யப்பட்ட தவறுக்கு பாதுகாப்பு பெறலாம். அகதி அந்தஸ்து கோரி வெளிநாடுகளில் தஞ்சமடைதல் இதற்கு உதாரணமாகும்.
பொதுவாக அரசின் பாதுகாப்புக்காக மிகவும் அவசியமென கருதக்கூடிய நிலையில் சமாதானம், சூழல் பாதிப்பு, நாட்டின் உடனடி அபாயம் என்பவற்றை கருத்தில் கொண்டு செய்யப்படும் தவறுகளுக்கு பாதுகாப்பு உண்டு. ; ஐக்கிய இராச்சிய கடற்பரப்பில் லைபீரியாவுக்கு சொந்தமான ரொறி கன்யோன் கப்பலிலிருந்து அதிகளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்நாடு கப்பலை குண்டுவைத்து அழித்தமை அவசியதேவை என்பதனடிப்படையில் குற்றப்பொறுப்பு சுமத்தப்படவில்லை.
அடுத்து சர்வதேச அளவில் இடம்பெற்ற தவறுகளால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வது அவசியமானதாகும். ஐ.எல்.சி உறுப்புரை 42ன் படி கடப்பாடு மீறுகையால் பாதிக்கப்பட்ட அரசானது மற்றைய அரசுக்கெதிராக அல்லது பல அரசுகளுக்கெதிராக அல்லது சர்வதேச சமூகத்திற்கெதிராக வழக்கிட்டு நிவாரணங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
குறித்தவொரு தவறுகை தொடர்பாக பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பின் ஒவ்வொரு நாடுகளும் தனித்தனியே கேள்விக்குட்படுத்தவேண்டும்;. மேலும் கடப்பாடு மீறுகை தொடர்பாக பாதிக்கப்படாத தரப்பினரும் குழுக்களின் நன்மை கருதி வழக்கிடலாம். இதன்மூலம் குறித்த கடப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரல், உத்தரவாதத்துடன் தொடருதல், நட்டஈட்டுக் கோரிக்கை விளைவுகள் ஏற்படும்.
ஐ.எல்.சி உறுப்புரை 30ல் கடப்பாட்டை நிறுத்துதல் மற்றும் குறித்த தவறு மீண்டும் நடைபெறாது என்ற உத்தரவாதத்துடன் தொடர்ந்து கடப்பாடுகளால் பிணிக்கப்படுதல் ஆகிய இரு அம்சங்களை உள்ளடக்கியது. ஆனால் இதன் முக்கிய நோக்கம் குறித்த அனுபவங்களை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் வினைத்திறனான கடப்பாட்டு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துதலாகும்.
றெயின்போ வாரியர் வழக்கில் கடப்பாடொன்றின் நீக்கத்திற்கான (Cessation) கட்டளை வழங்கப்படுவதற்கு குறித்த தவறானது தொடர்ச்சியாக இருப்பதுடன் மீறப்பட்ட விதியானது (Violated Rule) கட்டளை வழங்கும் திகதியில் வலுவிலிருக்க வேண்டும் எனப்பட்டது
லாகிராண்ட் வழக்கில் ஐக்கிய அமெரிக்கா ஜேர்மனி பிரஜை ஒருவர் தொடர்பாக தூதரக அறிவிப்பு கொடுக்கும் கடப்பாட்டை நிறைவேற்றவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடைபெறாது என ஐக்கிய அமெரிக்காவால் வழங்கப்பட்ட உறுதிமொழியில் ஜேர்மனி திருப்பியடைந்தது.
(தொடரும்)
சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்