யாழில் ஆலயத்தில் திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று!
யாழ்ப்பாணம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் , திருவிழா நிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டுள்ளது.
தொற்றிற்குள்ளான குருக்களே, ஆலயத்தில் பக்தர்களிற்கு திருநீறு பூசி விடுவதால், சுதுமலையில் கொரோனா பரவல் ஏற்படலாமென்ற அச்சம் உருவாகியுள்ளது. சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
குறித்த ஆலயத்தில் கொடியேற்றிய குருக்கள், கொடியேற்றத்திற்கு முன்னதாக நயினாதீவு சென்றார், அங்கு கொரோனா தொற்றிற்குள்ளானவருடன் தொடர்பிலிருந்தார் என்ற தகவலையடுத்து, ஆலயத்தின் 3ஆம் திருவிழாவுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
அதன்பின்னர் அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் திருவிழாவில் கலந்து கொண்ட நிலையில், இரு நாட்களின் பின் மீண்டும் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் குருக்களுக்கு தொற்று உறுதியாகியிருந்தது.
இதையடுத்து, 9ஆம் திருவிழாவுடன் திருவிழா இடைநிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டது. ஆலய தர்மகர்த்தா சபையினர் உள்ளிட்ட ஆலயத்துடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.