முள்ளியவளையில் முறிந்து விழுந்த மரம்: சேதமடையும் நிலையில் தொலைத்தொடர்பு கம்பிகள்
முல்லைத்தீவு (Mullaitivu) – முள்ளியவளை பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம் ஒன்றினால் தொலைத்தொடர்பு கம்பிகள் சேதமடையும் நிலையில் உள்ளன.
முள்ளியவளை தனியார் வங்கிக் கிளை ஒன்றுக்கு அருகில் வீதியின் ஓரத்தில் உள்ள மரம் முறிந்து தொலைத்தொடர்பு கம்பிகளின் மீது விழுந்துள்ளது.
வீதியின் ஓரமாக நிழலைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நடப்பட்ட இந்த மரம் நிலத்தில் இருந்து மூன்றடி உயரத்தில் முறிந்து விழுந்துள்ளது.
நீண்ட நாட்களான பின்னும் இதுவரையில் முறிந்த அந்த மரம் அகற்றப்படவில்லை. இதனால் வீதியின் ஓரமாக கொண்டு செல்லப்படும் தொலைத்தொடர்பு கம்பிகள் சேதமடையும் நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தொலைத்தொடர்பு கம்பிகள் சேதமடைவதால் அரசுக்கு ஏற்படும் செலவினம் பொதுமக்கள் மீது சுமத்துப்படும் என சமூக ஆர்வலர்கள் தங்கள் விசனத்தை வெளிப்படுத்துகின்றனர்.
முள்ளியவளையில் பல இடங்களில் தொலைத்தொடர்பு கம்பிகள் சேதமடையும் நிலையிலும் சேதமடைந்த நிலையிலும் காணப்படுவதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
வீதிகளின் வழியே தொலைத்தொடர்பு கம்பிகளை நிறுவி சேவை வழங்கி வரும் இந்த நிறுவனம் அரச நிறுவனமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு கம்பிகளை பாதுகாத்து பேணிக்கொள்வதில் காட்டப்படும் அக்கறை போதியளவில் இல்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.
இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனமெடுத்துச் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.