இதுவும் கடந்து போகும்!
வாழ்க்கையில் நாம் தோல்வியடைந்து, துன்பப்பட்டு, மனம் தளர்ந்த வேளையில் எமக்கு பேராறுதலாகவும் அடுத்து முன்னேறவேண்டும் என்ற உந்துசக்தியையும் தருவது மேற்கூறிய தலைப்பாகும். நாம் அனைவரும் ஏதோவொரு துன்பத்தைக் கடந்து வந்திருப்போம்.
கடந்து வருவதற்கு ஒரு மனதிடமும் தைரியமும் வேண்டும். எங்கள் அனைவருக்கும் இவை உள்ளன, ஆனால் தேவையான நேரத்தில் அதைப் பயன்படுத்துவதில்லை.
நாம் வாழும் வாழ்க்கை நிரந்தரமல்ல என்பது எமக்குத் தெரிந்த உண்மையாகும்,ஆனால் சில வேளைகளில் அவற்றை மறந்து அற்ப காரணங்களுக்காக சண்டை போடுகிறோம்,மற்றவரைத் துன்புறுத்துகிறோம்.
எல்லாம் எமக்கே வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருக்கின்றோம். நாம் ஒருவரைக் காயப்படுத்தும் போது அவர் நினைப்பது ஒன்றுதான் “இதுவும் கடந்து போகும்”.
எம்மை எதிர்க்கத் திராணியில்லாதவர்களை அல்லது பலவீனர்களை நாம் ஒடுக்கும் போது அவர்கள் மனதில் தோன்றுவது இதுவாகத்தான் இருக்கும். ஏன் எமக்கு இது நடக்கின்றது என நினைப்பார்கள் பின்னர் இத்துன்பம் தொடர்ந்து நிற்காது, அது சீக்கிரம் விலகிவிடும் என நினைப்பார்கள்.
எம்மில் பலர் இந்த நிலையைக் கடந்து வந்திருப்போம். இக் கூற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை விளங்கியிருப்போம்.
வாழ்க்கையில் தோல்வியும் துன்பமும் அடிக்கடி வரும் ஆனால் அடுத்த நொடியின் மீதுள்ள எம் நம்பிக்கை எம்மை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும். ஆனால் தோல்வியை நினைத்து துக்கப்படும் சந்தர்ப்பம் மிகக் கொடுமையானது. அது எம்மை முழுமையாக முடக்கிவிடும்.
தவறான முடிவுகளுக்கு எம்மைத் தூண்டும். ஒரு நாய் துரத்தும் போது அப்படியே நின்று கடிவாங்காமல் ஓடியோ அல்லது நாயை விரட்டுவதிலோ உள்ள தைரியம் வாழ்க்கைக்கும் வேண்டும்.
இதுவும் கடந்து போகும் என்று நாம் மனதிற்குள் நினைக்கும் போது எமது மனம் அமைதியடையும்,நாம் சவால்களை சமாளிக்க தைரியப்படுவோம்.
தோல்வி எம்மை அமைதியாக்கும்,எம் தலைக்கனத்தைக் குறைக்கும் அத்தோடு எம்மை சாதாரண மனிதனாக்கும். நாம் எமது பிள்ளைகளுக்கோ அல்லது சகோதரர்களுக்கோ அல்லது எம்மை சுற்றியிருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
எம் செயல்கள் அடுத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவமாக இருக்கக்கூடாது.
வாழ்க்கையை மிக இலகுவாக எடுத்துக்கொண்டால் எதுவும் இலகுவாகிவிடும். ஏனெனில் எமது நினைவுகளே எம்மை வழிநடத்துகின்றது. ஆகவே சாதகமான எண்ணங்களை நினைப்போம், மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் வைத்திருப்போம்.
எம்மை உயர்த்தி விட்டவரையும் எமக்கு உதவி செய்தவரையும் மறக்காதிருப்போம். துன்பம் எமக்கு நேரிடும் போது இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக்கொள்வோம். அப்போது வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் வரும்.
கட்டுரையாளர்: bookofsecret.com
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.