இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பான முயற்சியிற்காக புதிய ஒப்பந்தகாரர்களை அழைப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் முடிவு செய்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டப்பட்டாலும், விண்ணப்பதாரர்களில் பலர் இதிலுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சிடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பான விசேட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதற்கு புதிய ஒப்பந்தகாரர்களை அழைப்பதற்கும் அமைச்சர் அலஸ் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, அமைச்சர் அலஸ் இதற்கான விலைமனு அழைப்பை நிராகரித்ததுடன், சாதாரண கொள்முதல் செயல்முறையின் மூலம் விண்ணப்பம் கோர முடிவு செய்துள்ளார்.
இதேவேளை, வருடாந்தம் 700,000 இற்கும் அதிகமான இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு வழங்க பயன்படும் இயந்திரங்களுக்கு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் செலவழிக்க வேண்டியிருந்தது என்றும், அதிக விலை காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதும் கடினமாகிவிட்டது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.