வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் அதிகரிக்கும் மோசடி: குவியும் முறைப்பாடுகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட மோசடி விசாரணைப் பிரிவிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரையில் 2155 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் 1051 முறைப்பாடுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் இலங்கை தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருவதாகவும், அதே நேரத்தில் 11 சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பணியகம் கூறியுள்ளது.
மேலும் 65 மோசடிக்காரர்களை கைது செய்ய மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் படி, ஆறு கோடி ரூபாவிற்கும் அதிக தொகை நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலையைப் பெறுவதற்காக நிறுவனமொன்றிற்கு பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை சரிபார்க்குமாறும் வெளிநாட்டு வேலைகளைத் தேடுவோருக்கு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.