
வடக்கில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!
வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Dgi) இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வட மாகாணத்தில் காணப்படுகின்ற வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வட மாகாண சபையில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவை ஆளுநர்களுக்கு வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவிடம் அனுமதி
எனவே அந்த தேவையினை நாம் அடையாளம் கண்டு, அதற்கான முறையான அதிகாரத்தை திறைசேரியிடமிருந்து பெற்றதன் பின்னர் இத் திட்டம் முன்னெடுக்கப்படும்.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால் அதற்கான விசேட அனுமதியினை தேர்தல் ஆணையகத்திடம் (Election Commision) பெற்றுக்கொண்ட பின்னரே நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அடுத்த கட்டமாக வட மாகாணத்தில் காணப்படும் வேலையற்ற இளைஞர் யுவதிகளின் பாரிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் மூன்று விசேட பொருளாதார மையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில்நுட்பங்களுடனான வேலை வாய்ப்பு
காங்கேசந்துறை, கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பகுதிகளில் விசேட பொருளாதார மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதனூடாக வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களுடனான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும்.
எனவே, இளைஞர் யுவதிகள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான தொழிநுட்பக் கல்வியையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.