
மட்டக்களப்பில் பட்டதாரியின் திருகுதாளங்கள் அம்பலம்
மட்டக்களப்பில் அவுஸ்ரேலியா பட்டதாரி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று(12) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
புற்று நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு நன்கொடை வழங்குவதாக பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டு பணம் தருவதாகக் கூறி ஒன்லைன் பணப் பரிமாற்ற மென்பொருள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த கணனி மென்பொருள் பொறியாளரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
கைதான சந்தேக நபர் அவுஸ்திரேலியாவில் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநராகப் பட்டம் பெற்று நாட்டிற்கு வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இணையவழி பணப்பரிவர்த்தனை மோசடி
நோயாளர்களின் நிதித் தேவைகளை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் உறுதிப்படுத்தி இந்த பண மோசடியை செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சந்தேக நபர் ஆதரவற்ற நோயாளர்களின் தகவல்களை திருடி, இணையவழி பணப்பரிவர்த்தனை மென்பொருளின் ஊடாக வேறு வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து இத்தொகையை மோசடியாகப் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.