பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வில் இம்மாதமும் உறுதியற்ற நிலை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள உயர்வு இம்மாதமும் உறுதியற்ற நிலையில் இருப்பதாக தோட்டத் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மே 21ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சின் செயலாளர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், இம்மாதத்திற்கான சம்பள இறுதி கணக்கு கடந்த 05ஆம் திகதி தோட்ட நிர்வாகங்களால் முடிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதமும் சம்பள உயர்வில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, குறிப்பிட்ட தொகையை, தம்மால் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பு காட்டி வந்திருந்தது.
மேலும், சம்பள அதிகரிப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.
குறித்த வழக்கை கடந்த 03ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென தீர்ப்பளித்தது.
இதற்கமையவே, இம்மாதம் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ள சம்பளம் 1,700 ரூபாவின் அடிப்படையிலேயே இருக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சம்பள இறுதி கணக்கில் மாற்றம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என தொழிற்சங்க தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், சம்பள அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிருபங்கள் எவையும், தங்களுக்கு கிடைக்கவில்லையென தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.