பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் செல்லுபடியாகும் கால எல்லை நீக்கம்
பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ் நகல்களையும் செல்லுபடியாகும் கால வரையறையின்றி ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் நகல்கள் செல்லுபடியாகும் காலவரையறையின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய நகல் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று முன்னர் கட்டுப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இந்நிலைமையினால் பிரதிகளை வழங்குவதற்கு மக்களிடம் பெரும் உந்துதல் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதுள்ள நிலமைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் திணைக்களம், இதன் மூலம் பொதுமக்களின் இடர்களைக் குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, குடிவரவு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் ஆகியவற்றுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.