பணத்தை இழக்க அதிக வாய்ப்பு! பொதுமக்களை கடுமையாக எச்சரிக்கும் மத்திய வங்கி
சட்டவிரோத பிரமிட் திட்டங்களுடன் இணைவதன் மூலம் ஒருவர் தனது பணத்தை இழக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய திட்டங்களில் ஈடுபடவோ அல்லது முதலீடு செய்யவோ வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்ட விரோத பிரமிட் திட்டங்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்கமைய இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடியாணையின்றி கைது செய்ய முடியும். இது பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும். தடை செய்யப்பட்டுள்ள பிரமிட் திட்டங்களை முறையான திட்டமாக காட்டுவதற்கு பல்வேறு தந்திரங்கள் கையாளப்படுகின்றன.
முதலீடுகளை பெறுவதற்காக நான்கு அடிப்படையில் கடத்தல் பிரமிட் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் மத்திய வங்கிக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மோசடிக்காரர்கள் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளும் பிரமிட் திட்டங்கள் சட்டபூர்வமானது என காட்டிக்கொள்வதற்காக தாம் மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப முதலீட்டாளர்களின் நிதிகளை பாதுகாப்பதாகவும் இத்திட்டத்தின் மூலம் உரிய வரிகள் அரசுக்கு செலுத்தப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் குறித்து மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்த மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் எந்தவித உண்மையும் இல்லை என பொது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் வெளிநாட்டுச் செலாவணி திணைக்களத்தின் இணையத்தளத்திலும் மத்திய வங்கியின் உரிமம் பெற்ற மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களைத் தவிர ஏனைய நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யக்கூடாது என்பதுடன் இந்தத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி மேலும் தெரிவிக்கிறது.
இத்தகைய திட்டங்களுடன் இணைவதன் மூலம் ஒருவர் தனது பணத்தை இழக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய திட்டங்களில் ஈடுபடவோ அல்லது முதலீடு செய்யவோ வேண்டாம் என மத்திய வங்கி மேலும் அறிவுறுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.