தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் திருத்தம் செய்வதற்குமான கட்டணம் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆட்கள் பதிவுத் திணைகளத்தில் முதல் முறையாக விண்ணப்பிப்பவருக்கு தேசிய அடையாள அட்டையை பதிவு செய்து வழங்க 200 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு பொது பாதுகாப்பு அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, திருடப்பட்ட அல்லது காணாமற்போனவற்றுக்கு பதிலாக நகல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டையின் விவரங்களைத் திருத்தம் செய்வதற்கான கட்டணம் 500 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அரசிதழின்படி 1968ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆட்கள் பதிவுச் சட்டத்தின் பிரிவு 17(4) இன் கீழ் காலாவதியான தேசிய அடையாள அட்டைக்கு புதிய அடையாள அட்டையை வழங்குவதற்கு 200 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்றும் குறிபிடப்பட்டுள்ளது.