ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு: இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம்
ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை.
முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) கருத்துரைத்திருந்தார்.
எனினும், இந்த கருத்து சொந்த கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சி தரப்பிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், சட்டமா அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமையின் மத்தியில், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமே நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சட்டமா அதிபரின் கருத்தை கேட்பாரா என்ற கேள்வியும் அரசியல் தரப்பில் எழுப்பப்பட்டு வருகிறது.
அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் ஆறு வருட கால எல்லையானது சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரம் இல்லாமல் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது என்ற வாதம் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகிறது.
எனவே, ஆறு ஆண்டுகளுக்கு மேல் பதவிக் காலத்தை நீடிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால், தற்போதுள்ள ஐந்தாண்டு வரம்பை வாக்கெடுப்பு நடத்தாமல் மேலும் ஓராண்டுக்கு நீடிக்க முடியும் என்றும் வாதிடப்படுகிறது.
இந்தநிலையில், அனைத்து சாத்தியமான மற்றும் அசாத்தியமான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.