
கிளிநொச்சியின் தமிழரசு கட்சி பிரமுகர் மரணம்
கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து பல்துறைசார் பணிகளை முன்னெடுத்ததோடு, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேரும், என் அன்பிற்குரிய முதல்நிலை வழிகாட்டியுமாகிய சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை ஐயாவின் திடீர் இழப்பு எம்மை நிலைகுலையச் செய்திருக்கிறது.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்ததன் வெளிப்பாடாகவே ஐயாவின் பணிகள் அன்றும், இன்றும் ஒருசீராய் அமைந்திருந்தன.
தமிழின விடுதலை என்ற கொள்கையை ஏற்று தன் அரசியற் பணிகளை ஆரம்பித்திருந்த இவர், தமிழின விடுதலைப் போர் மெளனிக்கப்பட்ட பின்னரும், போர் தின்ற நிலமொன்றில் கையறுநிலையில் நின்ற மக்களின் குரலாகவே ஓங்கி ஒலிக்கத் தொடங்கினார்.
போரும், இடப்பெயர்வுகளும் தந்த இழப்புக்களின் வலிசுமந்திருந்த எமது மக்களின் மனமறிந்த கிராம அலுவலராக அவர் ஓய்வு, ஒழிச்சலற்று ஆற்றியிருந்த மகத்தான மக்கள் பணியும், மாவட்ட எல்லைகளைக் கடந்தும் கரம்விரித்த அவரது மனிதாபிமானச் செயற்பாடுகளுமே, 2013களில் அவரை ஓர் மக்கள் ஆணை பெற்ற வடக்கு மாகாண சபை உறுப்பினராக மாற்றியிருந்தது.
எந்தக் கொள்கைவழி நின்று தன் மக்கள் பணிகளை ஆற்ற ஆரம்பித்திருந்தாரோ, அதே கொள்கைகளின் வழி தன்னைக் கட்டமைத்துக்கொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தூணாகவே இறுதிக் கணம் வரை அவர் இருந்திருக்கிறார்.
தன் அரசியல் இலக்கினின்று கிஞ்சித்தும் பிறழாத பெருமனிதனான இவரும், இவர் வாழ்ந்த விதமும் என்றென்றைக்கும் எம்போன்ற பலருக்கும் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை. கட்சி நிலைப்பாடுகளைக் கடந்து, என்மீது கொண்டிருந்த தனிப்பட்ட அன்பினாலும், அக்கறையாலும், போலித்தனங்களற்று எனது அரசியல் பயணத்தை நேசித்த ஓர் ஆத்மார்த்த வழிகாட்டியை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது எனக்கு ஆழ்ந்த துக்கத்தையும், அவரது இறுதிக் கணங்களில் உடனிருக்க முடியாத பெருவலியையும் தந்துள்ளது.
இழந்து இழந்து களைத்தே ஏதிலிகளான எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்த நினைவேந்தல்களை கடைப்பிடிக்கும் உரிமையை நிலைநிறுத்துவதற்காய் இவர் ஆற்றியிருக்கும் பணிகள் அளப்பரியவை. அதிலும் குறிப்பாக மீள்குடியமர்வுக்கு பிற்பாடு, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறியதும், ஆயுத முனையிலான உயிர் அச்சுறுத்தல்களையும், இராணுவ விசாரணைகளையும் புறந்தள்ளி 2016 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி தமிழ்த்தேசிய மாவீரர் தினத்தை உணர்வெழுச்சியோடு நினைவேந்துவதற்குரிய ஒழுங்குகளை துணிந்து பொறுப்பேற்று நடாத்திமுடித்த ஐயாவின் தற்துணிவே, தமிழர்களின் உணர்வெழுச்சியை மீளவும் சர்வதேசம் வரை கொண்டுசேர்த்திருந்தது.
நெருக்கடிகள் நிறைந்த அக்காலத்தில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் தான், இன்றளவும் அப்பணிக்குழுவின் தலைவர். இவ்வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை அவரின் தலைமையிலேயே ஆரம்பித்துள்ள எம்மை, எதிர்பாராது நிகழ்ந்த அவரது இழப்பு பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சமூக, அரசியல் பணிகளுக்கு அப்பால், இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் மிக்க அவர், தன் அந்திம காலத்திலும் எல்லாம் வல்ல ஈசனின் தொண்டனாகவே இருந்து இறையடி சேர்ந்திருக்கிறார். பொருளாதார நெருக்கடி, கோரோனாப் பெருந்தொற்று என முழுநாடுமே முடங்கியிருந்த அந்த இடர்காலத்திலும் உருத்திரபுரீஸ்வரப் பெருமானின் அறங்காவலர் சபைத் தலைவராக இருந்து, எம்பெருமானின் ஆலயம் புத்தெழில் பெற்று மிளிரவும், இவ்வருட முற்பகுதியில் குடமுழுக்குப் பெருவிழா காணவும் தன்னை முழுதாக அர்ப்பணித்ததோடு, அவ் ஆலயத்தின் மீது தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளையும் அந்த ஊரின் மக்களோடு ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தி, இந்த மாவட்டத்தின் மரபுரிமைச் சொத்தான உருத்திரபுரம் சிவன் கோயிலின் சுயாதீன இயங்குநிலையை மீள நிலைநாட்டியமை அவரது காலப்பெரும் பணி.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் நீதி, நேர்மை, அநீதிக்கெதிராய் ஆக்ரோசிக்கும் நெஞ்சுரம், அன்பின்பால் எல்லோரையும் அரவணைக்கும் வசீகரம், தோற்றத்திலும், வாழ்விலும் பேணிவந்த வெண்மையும், எளிமையும், தனிமனித ஒழுக்கம், பிறர்க்குதவும் பெருங்கொடை உளம் என்பன மற்றவர்களுக்கு முன்னுதாரணமான மனிதனாக அவரை அடையாளப்படுத்தியிருந்தன.
மிகச் சிறந்த நிர்வாகியாக, மக்கள் பிரதிநிதியாக, மக்கள் சேவகனாக, சமூக சீர்திருத்தவாதியாக, ஆன்மீகப் பணியாளனாக, தன் பிள்ளைகளையும் தன்வழியே உருவாக்கிய நற்தந்தையாக, வாழும் காலம் முழுமைக்கும் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பசுபதி ஐயாவின் இழப்பு சாதாரண இழப்பல்ல. அது எம் எல்லோரதும் உணர்வுகளோடு ஒன்றிக்கலந்த ஒரு பெருமனிதனின் இழப்பு.
இருந்தபோதும் காலத்தின் சமரசங்களுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டிய கட்டாயத்தை ஏற்று, ஐயாவின் ஆத்மா உருத்திரபுரீஸ்வரப் பெருமானின் திருக்கழல்களில் இணைந்திருக்கப் பிரார்த்திக்கும் அதேவேளை, அவரது இழப்பின் வலி சுமந்து நிற்கும் மனைவி, மகள்மார் மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்மன அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கிறேன் – என்றுள்ளது.