
எத்தியோப்பியாவில் பட்டினியால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
டிக்ரேயில் 88 துணை மாவட்டங்களும் இடம்பெயர்ந்தோர் வசிக்கும் 643 முகாம்களும் உள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இரண்டு வருடங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததன் பின்னர், அந்நாட்டின் டிக்ரே (Tigray) பிராந்தியத்தில் 1329 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
உள்ளூா் சுகாதாரத்துறையும், மெக்கலே (Mekele) பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியாவின் வடக்கு மாகாணமான டிக்ரேயின் தலைநகா் மிகேலியில் அண்மைக்காலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு உணவுப் பற்றாக்குறை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டிக்ரேயில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் முகாம்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, அங்கு 1,329 போ் பட்டினியால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்ரேயில் 88 துணை மாவட்டங்களும் இடம்பெயர்ந்தோர் வசிக்கும் 643 முகாம்களும் உள்ளன.
அனைத்திலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பட்டினி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் 2 ஆண்டுகளாக நடைபெற்ற மோதலில் 80,000-ற்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (Tigray People’s Liberation Front ) மற்றும் பிரதமர் அபை அகமது (Abiy Ahmed) தலைமையிலான அரசாங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற மோதல் சா்வதேச நாடுகளின் முயற்சியால் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.