அரச வேலை பெற்றுத் தருவதற்காக இளம் யுவதியொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய யாழ்ப்பாண கட்சி அமைப்பாளர் கைது
அரச வேலை பெற்றுத் தருவதற்காக இளம் யுவதியொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இலங்கை ஐக்கிய முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் உட்பட இரு சந்தேக நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று (07) உத்தரவிட்டார்.
கல்முனையில் வசிக்கும் இலங்கை ஐக்கிய முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முஹம்மது காசிம் முஹம்மது மற்றும் அவரது செயலாளராகக் கூறப்படும் கொழும்பு 13 இல் வசிக்கும் எம்.பி.எஸ்.லெப்பை செய்னுல் ஆப்தீன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னிடம் அரச வேலை கேட்டு வந்த யுவதியிடம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இலஞ்சம் மற்றும் பாலியலஈ லஞ்சம் கேட்ட சந்தேக நபர், முதலில் ரூ.50,000 பணத்துடன் தன்னை சந்திக்க வருமாறு தெரிவித்ததாக முறைப்பாட்டாளர் இலஞ்ச ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
புறக்கோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து பணத்தைப் பெற முயன்றபோது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது.