சியோமியின் சைபர்டாக் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு!
சியோமி நிறுவனம் தனது முதல் குவாட்ராபெட் ரோபோட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது சியோமி ரோபோட் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த ரோபோட் போஸ்டன் டைனமிக் நிறுவனத்தின் ஸ்பாட் ரோபோட் டாக் போன்றே காட்சியளிக்கிறது.
சியோமியின் புதிய சைபர்டாக் (CyberDog) என்விடியா நிறுவனத்தின் ஜெட்சன் சேவியர் என்.எக்ஸ். ஏ.ஐ. சூப்பர்கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் எம்பெட் மற்றும் எட்ஜ் சிஸ்டம்கள் கிட்டத்தட்ட 128 ஜிபி தொழில்துறை தரத்தாலான எஸ்.எஸ்.டி. மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் தலையில் பல்வேறு கேமரா, மைக்ரோபோன் மற்றும் சென்சார்கள் உள்ளன. இதில் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்போதைய வீடியோவின் படி புதிய குவாட்ராபெட் சைபர்டாக் மழையிலும் சீராக இயங்கும் என தெரியவந்துள்ளது.
சீன சந்தையில் சைபர்டாக் விலை 9,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 1,14,567 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை கொண்டு டி.வி., வாக்யூம் கிளீனர், ஏர் பியூரிபையர் போன்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் இயக்க முடியும். இதில் சியோ-ஏ.ஐ. சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.