Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

புலம்பெயர் தமிழர்களை மோசடியாக ஏமாற்றி பணம் பறிக்கும் இளம் பெண்


போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து , வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோசடியாக பெற்றிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு , கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து சென்ற குறித்த பெண், தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு வேகோ மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் , தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடியாக பெற்று சென்றுள்ளார்.

பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர் , அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே , குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமையை உறவினர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு தெரியவந்ததை அடுத்து , பொலிஸாருக்கு பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம் , பெண் தொடர்பான அடையாளங்களை தெரிவித்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Back to top button