முதியவர்களுக்கான அறையை அமைக்கும் போது…
கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதை போல முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது. முதுமை எல்லோருக்கும் சொந்தம் என்பதால் இன்று நம் பெற்றோருக்காகவோ, தாத்தா- பாட்டிகளுக்காகவோ கட்டும் அறைகள் பிற்காலத்தில் நமக்கு உதவும் என்ற தொலைநோக்கு யோசனையும் தேவை. சரி, முதியவர்களுக்கான அறை, வசதிகள் எப்படி இருக்க வேண்டும்? என பார்க்கலாம்.
அழகழகான டைல்ஸ்கள் வீட்டின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும். ஆனால், டைல்ஸ் தரைகள் முதியவர்களுக்கு கொஞ்சம் எதிரி என்றே சொல்லலாம். வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் தரைகளில் முதியவர்கள் நடக்கும்போது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கால்களை நனைத்து விட்டு வரும்போது விழும் வாய்ப்பு அதிகம். முதியவர்கள் கீழே விழுந்தால், அவர்களின் உடல் நிலை பாதிக்கக்கூடும்.
எனவே வழுக்கும் தன்மையுள்ள டைல்ஸ்களுக்கு பதிலாக, சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களை பதிக்கலாம். முடிந்த அளவுக்கு வீட்டுக்குள் மாடி படிக்கட்டுகளைச் சாய்வு தளமாக அமைப்பது முதியவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் படிக்கட்டுகளின் ஓரத்தில் நிச்சயமாகக் கைப்பிடி அமைக்க வேண்டும். மாடிப்படிக்கட்டுகளில் டைல்ஸ்கள் பதிப்பதை தவிர்க்கலாம்.
குளியலறையில் சொரசொரப்பு தன்மையுள்ள டைல்ஸ்களை பயன்படுத்துவது முதியவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்றது. குளியலறை அலமாரிகள் குறைந்த உயரத்தில் அமைப்பதும் நல்லது. குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகள் வலுவாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்யவும். மேற்கத்திய பாணி கழிப்பிடங்களை அமைப்பதே முதியவர்களுக்கு ஏற்றது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.