Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம்

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (06) நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சட்டமா அதிபரின் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தின் முன் விடயங்களை முன்வைத்து, குறித்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியை நிர்ணயிக்குமாறு கோரினார்.

அதன்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்தது.

மேற்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தங்களுக்கு தண்டனை விதித்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே மேல் நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Back to top button