இதைப்பற்றிக் கேட்டிருக்கிறீர்களா?
பிரயாணத்தடை எனும் லொக்டவுன்,வெளியில் சென்றால் பிடிப்பார்கள் என்பது எமக்கு ஒன்றும் புதிதில்லை.90களில் பிறந்தவர்களுக்கு ஊரடங்குச்சட்டம் பற்றிய பல அனுபவங்கள் உண்டு.அப்போதெல்லாம் வீட்டிலேயே பெரும்பாலும் நேரத்தைச் செலவிட்ட எமக்கு பல புதினங்கள் உதவியாக இருந்தன. அப்போது கரன்ட் இல்லை, இன்ரநெட் இல்லை,ஆனாலும் ரேடியோ கேட்டோம்,டெக் வாடகைக்கு எடுத்து படம் பார்த்தோம்,கார்ட்ஸ் விளையாடி “கம்மாரிஸ்” அடித்தோம், கீழே விழுந்த செல் பீஸ் தொடங்கி முத்திரை வீட்டில் நித்திரை வரை எமது சேகரிப்புகள் அநேகம்.
அப்போதெல்லாம் பொழுதைப் போக்குவது என்பது மிகவும் ஒரு சாதாரண விடயம்,ஏனெனில் எமது உயிரைப் பாதுகாப்பதே பெரும்பாடாக இருந்தது.ஆனால் இன்று எமக்கு அனைத்து வசதிகள் இருந்தும் பொழுது போக்குவது என்பது நித்திரை கொள்வதிலும் சாப்பிடுவதிலும் முடிந்து விடுவது பெரும் துயரம். இக்கொரோனா காலத்தில் வீட்டிலிருக்கும் போது எவ்வாறு நேரத்தை செலவிடலாம் என்று உலகளாவிய ரீதியில்😉 பல மக்கள் பின்பற்றும் சில விடயங்கள் கீழே உள்ளன.இவற்றை முயற்சித்துப் பார்ப்பதில் எவ்வித தவறுமில்லை,இயலாவிட்டால் மறுபடியும் நித்திரைக்குச் செல்வதே மிகச் சிறந்த வழியாகும்.😴
YouTube (யுரியூப்) எனும் உற்ற நண்பனின் உதவியுடன் சமைத்தல்
சமைத்தல் என்பது பெண்களுடைய வேலை என்றே நினைப்பவர்கள் இன்னும் முன்னேற இடமுண்டு.சமையல் என்பது குசினியிலிருந்து வெளியே வந்து அது சமையற்கலையாக மாறி கன காலமாகி விட்டுது.வீட்டிலிருக்கும் போது யுரியூபைப் பார்த்து சமைப்பது இலகுவான காரியமாகும்.இன்று ஏராளமான சமையல் சனல்கள்,மிகவும் இலகுவான அதேநேரம் வீட்டில் சாதாரணமாகக் கிடைக்கும் பொருட்களைக்கொண்டே எவ்வாறு பல்வேறு டிஷ்களைச் செய்வது பற்றி தமிழிலேயே சொல்கிறார்கள்.இவ்வாறு தினமும் விதவிதமாக சமைப்பது எமது மனஅழுத்தத்தைக் குறைக்கும் ஒரு கருவியாகும்.அதாவது எப்போதும் எதிர்மறையான விடயங்களைக் கேட்பதை விட்டுவிட்டு எமது எண்ணங்களை இந்தப்பக்கம் திருப்பி விடலாம்.ஆனால் எமது சமையற்கலையை வயோதிபர்கள் மற்றும் சிறுவர்கள் மீது முதன்முதலில் பரிசோதிக்காமல் இருத்தல் எம்மை இன்னும் தேர்ச்சியாக்கும்.
வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள்
இன்று வெப் சீரிஸ் பார்ப்பது என்பது ஒரு சாதாரணமாகிவிட்டது.ஆனால் விதை எமது தொலைக்காட்சி நாடகங்கள் போட்டது.இன்று ஏராளமான ஒடிடி தளங்கள் எம்மைச் சுற்றியுள்ளது,அதில் பல்வேறு வகையான வெப் சிரீஸ்,உலகளவில் மிகவும் அதிகம் விரும்பிப்பார்த்த வெப் நாடகங்கள் அனைத்து தரங்களிலும் கிடைக்கின்றது.நெட் பிளிக்ஸ்,அமேசன் பிரைம்,ஹொட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் இன்று மிகவும் பிரபல்யமாக உலகின் அனைத்து பாகங்களிலும் கிடைக்கின்றது.குறிப்பாக இன்று பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலேயே வெளியாகின்றது.இவற்றை நாம் நேரடியாகவோ அல்லது தரமிறக்கியோ பார்க்க முடியும்.எமது ஓய்வு நேரத்தை இதில் செலவிட்டால் பல தரமான திரைப்படங்கள்,வெப் சீரிஸ்,டொக்கியுமென்டரி படங்கள் போன்றவற்றை பார்த்து நாமும் கூட பல ஸ்டேட்டஸ்களைப் ஃபேஸ்புக்கில் போடலாம் அல்லது உண்மையாகவே இவற்றை ஆர்வத்துடன் பார்ப்பது எம்மை கொஞ்சம் ரிலாக்ஸாக வைத்திருக்கும்.
புத்தங்கள் அல்லது வெப் கட்டுரைகள் வாசித்தல்
இதுவொரு அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக இருப்பது மிகவும் வருத்ததிற்குரியது.அதிலும் பல ஆங்கிலப் புத்தகங்களை அடுக்கிவிட்டு அவற்றை படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடும்போது புத்தகம் வாசிப்பது என்பது ஒரு சீனாகிப் போய்விடுதல் மிகவும் வருத்ததிற்குரியது.ஆனாலும் உண்மையான பல இலக்கிய ஆர்வலர்களின் ஃபேஸ்புக் போஸ்ட்களை நாம் பார்க்கும் போது சிறந்த புத்தகங்களுக்கான அறிமுகம்,அது தொடர்பான விளக்கங்கள் எமக்கு கிடைக்கும்.இன்று ஒன்லைனிலேயே நாம் விரும்பும் புத்தகங்களை மின்னூல் வடிவில் டவுன்லோட் பண்ணலாம்.இலவசமாக ஏராளமான புத்தகங்களை நாம் படிக்க முடியும். மேலும் சில இணையத்தளங்களை பார்ப்பதன் மூலம் எமக்குத் தேவையான மோட்டிவேஷன்களை தமிழிலேயே வாசிக்க முடியும்.எல்லாம் ஃப்ரீதான்.
வீட்டை அழகுபடுத்தல்.
எப்பொழுதும் ஒரே மாதிரியான சூழலுக்குள்ளே நாம் படுத்து எழும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எவ்வித சுவாரசியமும் இருக்காது.அவ்வப்போது எமது சூழலை எமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்க வேண்டும்.இத்தகைய ஓய்வுநேரங்களில் எமது அலுமாரியை அடுக்கலாம்,எமது அறையை மாற்றி அடுக்கலாம்,எமது மேசையை பல நாட்களுக்குப் பிறகு திறந்து அதில் என்ன இருக்கிறது என்று பார்த்து அவற்றை அடுக்கும் போது நாம் தொலைத்த பல பில்கள் முதற்கொண்டு பல ஆவணங்கள் சிக்கும்.எனவே இதைக் கொஞ்சம் முயற்சித்தால் எமது எண்ணங்களை மகிழ்ச்சியாக்கலாம்.
எம்மைச்சுற்றி பலவிதமான துர்செய்திகளைக் கேட்டவண்ணம் இருக்கின்றோம்,எமக்கு தெரிந்தவர்கள்,உறவினர்கள் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாம் அழுத்தங்களுக்கு உள்ளாவது சகஜம் என்றாலும் எமக்கு இருக்கும் ஓய்வுநேரத்தை இவற்றால் நிரப்பும் போது மனதிற்கு ஒரு இதம் கிடைக்கும்,மனம் லேசாகும்,எண்ணங்கள் பொசிடிவ் ஆகும்.
வெளியில போகாதிங்கோ,ட்ரோன் வைச்சுப் பிடிக்கிறாங்களாம்!
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.