தனிமையில் வசிக்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..
தென்னிந்தியாவில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இங்கு ஆயுட்காலத்தை பொறுத்தவரையில் ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழ்கிறார்கள். பெண்கள் தங்களைவிட வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்துகொள்வதால், கணவன்மார் முதலில் இறந்துபோகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 60 வயதைக்கடந்த ஆண்களின் மனைவிகள் கிட்டத்தட்ட 9 சதவீதம் பேர்தான் இறந்திருக்கிறார்கள். ஆனால் கணவனை இழக்கும் பெண்களின் எண்ணிக்கையோ மிக அதிகமாக இருக்கிறது. 60 வயதைக் கடந்த பெண்களில் 2 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விதவைகளாக இருக்கிறார்கள். 80 வயதைக் கடந்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், மனைவியை இழந்தவர்கள் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், கணவரை இழந்தவர்கள் எண்ணிக்கை 84 சதவீதமாகவும் இருக்கிறது.
பிள்ளைகள் வெளிநாட்டிலோ, வெளியூர்களிலோ வசிக்கும் சூழலில் கணவரையும் இழந்துவிடும் பெண்கள் வீட்டில் தனித்து வாழும் சூழல் ஏற்படுகிறது. ஒரு புறம், வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது பெருந்தவறாக நமது சமூகத்தில் கருதப்படுகிறது. இன்னொரு புறம், தான் கணவரோடும், குழந்தைகளோடும் வசித்த வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லவும் முதிய தாய்மார்கள் விரும்புவதில்லை. பிள்ளைகளுடனோ, உறவினர்களுடனோ சேர்ந்து மீதமுள்ள காலத்தை கழிக்க விரும்பாத தாய்மார்களும் இருக்கிறார்கள். அதனால் வீட்டில் தனித்து வாழும் முதிய தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் குறைவாக இருக்கிறது.
தனியாக வசிப்பவர்களை வங்கி ஊழியர்கள் போல் அணுகி வங்கி கணக்கு விவரங்களையும், பாஸ்வேர்டுகளையும் பெற்று மோசடி செய்வதும் நடக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் மகனோ, மகளோ கொரியரில் பார்சல் அனுப்பியிருக்கிறார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியும் மோசடி செய்கிறார்கள்.
தனிமையில் வசிக்கும் முதியோர்கள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
* முதியோர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை முதலில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது போன்று தங்கள் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். முதியோர்களை தனிமைப்படுத்துவதையும் அவர்களது பிள்ளைகள் தவிர்ப்பது அவசியம்.
* தனிமையில் வசிப்பவர்களை பராமரிக்கவோ, உதவி செய்யவோ வருகிறவர்களின் முழுவிவரங்களையும் சேகரித்து வையுங்கள். நிரந்தரமாக வீட்டிலேயே தங்கியிருந்து பராமரிப்பவர்களின் விவரங்களை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொடுத்துவையுங்கள். அவரது போட்டோ, போன் நம்பரை முதியவரின் உறவினர்களும் சேகரித்துவைத்துக்கொள்வது நல்லது.
* தனியாக இருப்பவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பது பாதுகாப்பானது. அடுக்குமாடி என்றாலும், தனி வீடு என்றாலும் முதியோர்கள் பக்கத்து வீட்டினருடன் நல்லுறவை பேணவேண்டும். தினமும் ஒருமுறையாவது அவர்கள் பக்கத்து வீட்டினருடன் பேசும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது.
* தினமும் இருமுறை பிள்ளைகளோடும், நெருங்கிய உறவினர்களோடும் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுவும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பேசவேண்டும். அந்த நேரத்தில் ஒரு மணி நேரம் கடந்தும் பேசாவிட்டால், முதியவருடனோ, அவரது வீட்டின் அருகில் இருக்கும் உறவினரிடமோ, குடியிருப்பு செக்யூரிட்டியுடனோ பேசி முதியவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். யாரிடமும் பேச முடியாவிட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும்.
* தனியாக வசிப்பவர்கள் டாக்சி, ஆட்டோ போன்றவைகளை பயன்படுத்தும்போது, தனியாக இருப்பதை எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பிற்கு ஏற்றது.
* பேஸ்புக், இன்டர்நெட் வழியாகவும் மோசடிகள் நடக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் தயங்காமல் அது பற்றி குடும்பத்தினருக்கு உடனே தகவல் கொடுத்துவிடுங்கள்.
* தானாகவே பூட்டிக்கொள்ளும் ஆட்டோமேட்டிக் லாக்குகளை வீட்டில் பயன்படுத்தக்கூடாது. ஆனால் செக்யூரிட்டி கேமரா, பாதுகாப்பு அலாரம் போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.
* வீட்டிற்குள் திருடன் யாராவது புகுந்திருப்பது தெரியவந்தால், அவனை எதிர்கொண்டு துணிச்சலை காட்ட முயற்சிக்க வேண்டாம். இருக்கும் அறையை உடனடியாக பூட்டி சுயபாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு பக்கத்து வீட்டினருக்கோ, அருகில் உள்ள உறவினர்களுக்கோ, போலீசுக்கோ தகவல் தெரிவியுங்கள்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.