
யாழில் கல்லூரி மண்டபத்தில் திருட்டு !
இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் நீராவியடி இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்துக்குள் புகுந்து பொருட்களை திருடிய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசியதகவலின் அடிப்படையில் பொம்மைவெளியை சேர்ந்த இருவரை புலனாய்வு பிரிவினர் கைது செய்து யாழ்பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மண்டபத்தில் களவாடப்பட்ட பித்தளை பெரிய குத்துவிளக்கு 1, பித்தளை சிறிய விளக்கு 11, அம்பிலிபயர் 1, சில்வர் பொருட்கள், கதிரை 25 ஆகிய பொருட்களை பொம்மைவெளி இரும்பு கடையில் விற்பனை செய்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருட்களை மீட்கும் நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதவானிடம் முற்படுத்தப்படவுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.