
யாழில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சங்கிலி அபகரிப்பு!
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்திய நபர், சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சாரதியின் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனைக்கோட்டை பகுதியில் வீதியால் வந்த முச்சக்கர வண்டியை அப்பகுதியில் நின்ற நபர் ஒருவர் மறித்து சாவகச்சேரி பயணிக்க வேண்டும் என வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பும் வழியில் சாவகச்சேரி சந்தியில் உள்ள கடையொன்றில், முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு ஒன்றை வழங்கி, மற்றையதை தானும் அருந்திய பின்னர் ஒருவரும் கைதடி – கோப்பாய் வீதி வழியாக திரும்பியுள்ளனர்.
அதன் போது சாரதிக்கு மயக்கம் வரவே சாரதி வீதியோரமாக முச்சக்கர வண்டியை நிறுத்தி மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து சாரதியின் கழுத்திலிருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு , முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மாயமாகியுள்ளார்.
வீதியால் சென்றவர்கள் சாரதி மது போதையில் வீழ்ந்து கிடக்கிறார் என நினைத்து பலர் கடந்து சென்ற நிலையில் , சிலர் அருகில் சென்று பார்த்த போதே அவர் மது போதையில் இல்லாமல் மயங்கி கிடக்கிறார் என்பதனை அறிந்து கோப்பாய் வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.