முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு சமூகப் பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கி கௌரவிப்பு!
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வட மாகாணத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்.நோத் கேற் ஹொட்டலில் கடந்த வியாழக்கிழமை(29) காலை 11.00மணிக்கு நடைபெற்றது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வட கிழக்கு மாகாண சிரேஷ்ட இணைப்பாளர் பி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் சமன் ஹன்டரகம அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பி.களுஆராச்சி மற்றும் பிரதி முகாமையாளர் எஸ்.டபுள்யு.லக்ஸ்மன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக மேம்பாட்டு முகாமையாளர் டி.எஸ்.லக்மல், சிரேஷ்ட இணைப்பாளர் ரஞ்சித் தேஸநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் 2019, 2020, 2021ம் ஆண்டுகளுக்கான வட மாகாணத்தில் தேசிய விருதுகளுக்குரிய மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சமூகப் பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறுதரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2019ம் ஆண்டு தொடக்கம் 2021ம் ஆண்டுவரை காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இலக்கினை 100 வீதம் பூர்த்தி செய்தமைக்காக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களுக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதே போன்று குறித்த காலப்பகுதியில் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட இலக்குகளை தேசிய ரீதியில் அடைவு மட்டத்தை அடைந்து கொண்ட பிரதேச செயலகமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டது.
முன்னாள் உடுவில் பிரதேச செயலாளரும் தற்போதைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருமான சி. ஜெயகாந்த் 2019, 2020, 2021ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக தேசிய அடைவு மட்டத்தை அடைந்து கொண்டமைக்காக தேசிய விருதினை பெற்றுக் கொண்டார்.
2019ம் ஆண்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தில் கடமையாற்றிய காலப்பகுதிக்குரிய விருதினை யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
அதேபோன்று 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தேசிய ரீதியில் அடைவு மட்டத்தை அடைந்த பிரதேச செயலகமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அதற்கான தேசிய விருது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறித்த காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி க.சஞ்சீவனுக்கு தேசிய அடைவு மட்டத்தினை பூர்த்தி செய்தமைக்காக தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மு/ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவன் குலேந்திரநாதன் அர்ஷயனுக்கு புலமைப்பரிசில் கொடுப்பணவு தொகை ரூபா 50, 000 காசோலை மற்றும் பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும், சமூக பாதுகாப்பு சபையினால் 2021 ஆண்டில் உத்தியோகத்தர்கள் அடிப்படையில் தேசிய மட்ட இலக்கினை பூர்த்திசெய்தமைக்காக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜோசப் ஜொய்ஸ்குமார் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், இராமஜெயம் ஜினேஸ் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த தேசிய விருது வழங்கும் விழாவானது வழமையாக கொழும்பில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போதய பொருளாதார சூழ்நிலை மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் காரணமாக மாகாண ரீதியாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்: முல்லைத்தீவு மாவட்டம் ஊடக பிரிவு