சமூக வலைதள மோகம்!
உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படை தேவைகளை தாண்டி சமூக வலைதளம் இன்று இன்றியமையாத ஓர் தேவையாக மாறியுள்ளது. இந்த சமூக வலைதளங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்னவோ தொடர்பாடலிற்காக தானே? ஆனால் இன்று இதில் என்னவெல்லாம் நடக்கிறது?
முதலாவதாக, அருகில் இருக்கும் சொந்தங்களை மறந்து நிகழ்நிலையில் உறவுகளை தேடுகின்றோம். இதில் ஆரம்பிக்கும் சொந்தங்களுக்கு எம் வாழ்வில் மிக முக்கிய இடம் கொடுக்கின்றோம். அவர்களும் எமக்கு அதே போன்ற முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். நேரில் பார்த்துப் பேசி பழகும் உறவுகளே பல நேரங்களில் பொய்யானவர்களாக இருக்கும் போது, நிகழ்நிலை உறவுகளை நூறு வீதம் நம்பி வாழ்வில் ஒரு பகுதியை இழப்பது முட்டாள்த்தனம் இல்லையா?
இரண்டாவதாக, சமூக வலைதளத்திற்காக நாம் ஒதுக்கும் நேரம். 24 மணித்தியாலங்களில் அதிகளவான நேரம் சமூக வலைதளத்தில் சஞ்சாரம் செய்கின்றோம் என்பதை உணராமலே சஞ்சரிக்கினறோம். இதனால், எம் தனிப்பட்ட திறன் வளர்ச்சிக்கு இடம் மறுக்கப்படுகின்றது. என்னால் என்ன செய்ய முடியும், என் தனித்தன்மை என்ன என்றே மறந்து வாழ்கின்றோம். “சமூக வலைதளங்களினூடாக பல பிரபல்யங்கள் உருவாகின்றார்களே” என்று நீங்கள் கேட்கலாம். முயற்சி செய்பவர்கள் பலர் இருந்தாலும், சராசரி மனிதர்களாகிய நாம் அனைவரும் வெறும் வேடிக்கைப்பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கின்றோம்.
அடுத்ததாக, எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு இடமாக இந்த சமூக வலைதளத்தினை நாம் பார்க்கின்றோம். இது சரியா? ஒருவருடைய தனிப்பட்ட பிரச்சிணை நான்கு சுவர்களுக்குள் தீர்க்கப்படும் போது இருக்கும் நிலைக்கும் பலருடைய கருத்துக்களையும் ஆறுதலையும் பெற்ற பின் ஒரு பிரச்சிணையை தீர்ப்பதற்கும் இடையில் பல்வேறு வேறுபாடு உள்ளது. பிரச்சிணையின் அடி முதல் நுனி வரை அறிந்தது நீங்களும் சம்பந்தப்பட்டவர்களும் மட்டும் தான். அப்படியிருக்க FACEBOOK commentயில் ஆறுதல் சொல்வோரின் பேச்சை வேதவாக்காக கொண்டு முடிவுகள் எடுக்கும் அளவிற்கு இன்று எம்மில் பலரும் சுய அறிவினை கடன் கொடுத்துவிட்டு தானே வாழ்கின்றோம்.
இன்னுமொரு மிக முக்கிய மோகம் தான், ஒரு மனிதனுடைய வாழ்வில் எப்போதுமே சந்தோஷம் மட்டும் தான் உள்ளது என்று சொன்னால் அது நம்பக்கூடிய விடயமா? மனிதன் எப்போதுமே தன்னை நல்லவனாகவே காட்டிக்கொள்ள முயற்சி செய்வான். அதே போல தான் இந்த சமூக வலைதளத்திலும், முடிந்தவரை தன்னுடைய சந்தோஷமான பக்கத்தையே அதிகமாக பகிர்ந்துகொள்கின்றான். இதை பார்க்கும் நாம், எம் வாழ்வில் மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் என்று எம்மையே நொந்துகொள்கின்றோம். பல்வேறு களியாட்டங்கள், பிறந்தநாள் கொண்ணடாட்டங்கள், ஆடம்பர நிகழ்வுகள், தன் குழந்தையின் பெருமைகள், கணவன் மனைவியின் சுற்றுலாக்கள், அன்னையர்தின கொண்டாட்டங்கள், தந்தையர் தின கொண்டாட்டங்கள் என இன்னும் ஏராளமான கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழியும். இவர்களுக்கெல்லாம் எந்த பிரச்சிணையும் இல்லை பணம் இருந்தால் போதும் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்று அவர்களை பார்த்து எம் வாழ்க்கை முறையினை மாற்ற முயற்சிக்கின்றோம். கடன் பட்டாவது நாமும் விழாக்கள் கொண்டாடி சமூக வலைதளத்தில் பதிவேற்ற முயற்சிக்கிறோம். ஆனால் உண்மையிலேயே நூறு வீதம் இவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்களா என்று தேடிப் பார்த்தால் அநேகமாக, “அட பாவிகளா உங்களுக்கெல்லாம் இவ்வளவு பிரச்சிணையை வைத்துக்கொண்டா ஏதோ ஜோலியாக இருக்கது போல social mediaவ சுற்றி வாரீங்க?” என்று கேட்க தோணும்.
இது இன்று பலரையும் பாதித்துள்ள ஒரு விடயமாக மாறியுள்ளது. சமூக அந்தஸ்து சமூக வலைதளத்தை கொண்டே முடிவு செய்யப்படுகிறது என்ற எண்ணம். ஒருவருடைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டால் அடுத்து பிறந்தநாள் கொண்டாடுபவர் அதை விட பிரம்மாண்டமாக கொண்டாடி பதிவேற்ற தான் முயற்சி செய்வார். சமூக வலைதளங்களை பார்த்து தாழ்வு மனப்பாண்மை கொண்டு வாழாமல், எங்களுக்கு இருப்பதை கொண்டு எம் வாழ்வை சந்தோஷமாக வாழ முயற்சி செய்வோம். வெளி வேடங்களும் போலி பந்தாவும் வாழ்க்கைக்கு என்றும் உதவாது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். சமூக வலைத்தளத்தில் ஆடம்பரம் காட்டாமலும் வாழ்க்கையை வாழ முடியும் தானே?
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனிகுமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.