கலதுர தோட்ட தாக்குதல் சம்பவத்திற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! – இ.தொ.கா ரூபன் பெருமாள்
இரத்தினபுரி, கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கலதுர தோட்டத்தில், தொழில் புரியும் தோட்டத் தொழிலாளி வேலைக்கு சமூகமளிக்காமையால் குறித்த தோட்டத்தின் காவலாளியாக கடமை புரியும் பெரும்பான்மையினத்தவர் தொலைபேசி மூலமாக குறித்த தோட்டத் தொழிலாளியின் கணவரை சாடியதுடன் நிறுத்தி விடாமல், அன்றைய தினம் மாலை வேலையில் அவரது தோட்ட குடியிருப்பு அமைந்துள்ள கோட்டப்பந்தா பிரதேசத்திற்கு குடிபோதையில் ஆயுதங்கள் சகிதம் இன்னும் சில பெரும்பான்மையின காடையர்களுடன் சென்று, குறித்த குடும்பத்தினரை தாக்கியது மட்டுமல்லாது, அந்த இடத்திலிருந்து அவரை இழுத்துச் சென்று தோட்டக் குடியிருப்புக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் வைத்து மேலும் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான வீராசாமி ஜெகதீஸ்வரன் (வயது 44) தற்போது இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும், இதுவரை இவ் அசம்பாவிதத்திற்கு காரணமான பெரும்பான்மை இனத்தவர்கள் ஐவரில் ஒருவரையேனும் கிரியல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் கைது செய்ய நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பாக தோட்ட இளைஞர்கள் தொலைபேசி மூலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு தெரிவித்ததையடுத்து, அவர் இவ்விடத்திற்கு விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தனக்கு பணிப்புரை விடுத்ததற்கமைய, சம்பவ இடத்திற்கு நேரடியாக விரைந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளான குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உடனடியாக குறித்த இடத்திற்கு வருமாறு கிரியல்ல போலீஸ் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்திய அதேவேலை, இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக தொடர்பினை ஏற்படுத்தி குறித்த சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். குறித்த இடத்திற்கு வருகை தந்த கிரியெல்ல பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தோட்ட மக்களுக்கு இவ்வாறு அசம்பாவிதங்களை நிகழ்த்தும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இவ்வாறு எமது தோட்ட மக்களுக்கு நடக்கும் அசாதாரணங்களுக்கு கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் முன்னெடுக்கும் உடனடி நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே, கடந்த வாரம் நுவரெலியா மாவட்டத்தின் பீட்றூ தோட்ட மக்களுக்காக களமிறங்கிய கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தொடர்பாக, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் ஒரு பிழையான செய்தியினை கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்கள் என்பது தெட்டத் தெளிவாகின்றது என ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.