![](https://tamilbreakingnews.com/wp-content/uploads/2025/02/IMG-20250209-WA0003.jpg?v=1739081294)
கேள்விக்குறியாகி வரும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு
இலங்கையின் உயர் சபையான பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பை அகற்றியிருக்கும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது.
மக்கள் பணிக்காக மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
தேர்தல்கால குரோதங்கள், உள்ளக முரண்பாடுகள், அரசியல் நோக்கங்கள், பாராளுமன்றத்தில் நிகழ்த்தும் உரைகள், தனிப்பட்ட காரணங்கள் என்பவற்றால் இவ்வாறான அச்சுறுத்தல்களை மக்கள் பிரதிநிதிகள் எதிர்நோக்குவார்களாக இருந்தால், அவர்கள் பாராளுமன்றத்தில் பிரச்சினைகளை சுதந்திரமாக பேசவோ, மக்கள் சந்திப்புகளுக்காக நேரடியாகச் செல்வதற்கோ தயங்கும் சூழ்நிலை ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்திற்கு தங்களின் பிரதிநிதியாக அனுப்பியவர்களின் நோக்கங்கள் தடைப்படும்.
குறிப்பாக, ஆளும், எதிர்க்கட்சிகள் என்ற பாகுபாடின்றி அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட வேண்டும்.
அண்மையில் ஆளுங்கட்சியைச்சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளான சம்பவங்கள் நடந்திருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறைகாட்டாததன் விளைவாக நேற்று முன் தினம் (08) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.நளீம் தனது சொந்த ஊரில் வைத்து அதிகாலையில் தாக்கப்பட்டிருக்கிறார்.
எனவே, உடனடியாக இவ்விவகாரங்களில் கவனஞ்செலுத்தி, எதிர்காலங்களில் எவ்வித அச்சுறுத்தல்களுமின்றி தங்களின் மக்கள் பணியை சுதந்திரமாகவும் சிறப்பாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்துவது அவசியமாகும்.