இலங்கையில் வேகமாக பரவி வரும் ஐந்து புதிய வைரஸ் திரிபுகள் : ஆய்வில் கண்டுபிடிப்பு!!
இலங்கையில் 5 வைரஸ் திரிபுகள் வேகமாக பரவி வருவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிரித்தானியாவில் பரவிவரும் பி.1.1.7 என்ற வைரஸ் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை பகுதி, ஹோமாகம, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களிலும் இந்த வைரஸே பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் பொல்பித்திகம, குளியாபிட்டி, நிகவரெட்டிய, கனேவத்தை, அம்பலன்பொல, கிரிவுல்ல, பன்னல, வாரியபொல, மற்றும் பண்டுவஸ்நுவர ஆகிய பகுதிகளிலும் பிரித்தானியாவில் பரவிவரும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்திலும், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட மற்றும் மெதிரிகிரிய, பிரதேசங்களிலும் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மன்னார் நகர பகுதியில் தொற்று உறுதியானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போதும் பிரித்தானியாவின் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பீ.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்திலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நல்லூரை மையமாக கொண்டு குறித்த வைரஸ் பரவி வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பி.1.411 என்ற இலங்கைக்கு சொந்தமான தனி திரிபுடன் வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமை பிரதேசத்திலும் பீ.1.525 என்ற நைஜீரியாவில் பரவும் வைரஸ் திரிபும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் அமைந்துள்ள தனியார் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் பீ.1.351 என்ற தென்னாபிரிக்க வைரஸ் திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகம் தெரிவித்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.