கண்ணாடி விமர்சகர் – ஒரு பக்க கதை
பரபரப்பான நாளின் முடிவு, பிறந்தநாள் கொண்டாட்ட இரா விருந்திற்கு செல்ல தாயாராகிக்கொண்டிருந்த நேரம் அது. வழமை போல கண்ணாடி முன் நின்று ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது, திடீரென எனக்குள்ளே ஒரு பெருமிதம், இந்த உடையில் என்னை மிஞ்சும் அழகில் இந்த ஊரிலேயே யாரும் இருக்க முடியாது.
இன்று பலரும் என்னைப் பார்த்து பொறாமைப்படப் போகின்றார்கள் என்று சற்று நேரம் கண்ணாடியில் என் அழகை இரசித்தவளாய் நின்ற போது, திடீரென என் ஞாபகத்திற்கு வந்தது ஒரு விடயம். சில மாதங்களுக்கு முன்பு நான் என் நண்பர்களால் பாதிக்கப்பட்டவளாய் இதே கண்ணாடியின் முன்பு வந்து நின்ற போது, எனக்கே என்னை பிடிக்கவில்லை, இனம்புரியாத வெறுப்பு, கோபம் என என் முகத்தை அகோரமாக காட்டிய இந்தக் கண்ணாடி இன்று எப்படி என்னை அழகாக காட்டுகிறது என்று எனக்குள் ஒரு குழப்பம்.
இதையறிந்த கண்ணாடி, என்னைப்பார்த்து சொன்னது, “தோழியே, நானும் நீயும் வேறல்ல, உன் எண்ணங்களின் வெளிப்பாடும் தோற்றத்தின் பிம்பமும் நானாக இருந்தாலும், என் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் உன்னில் தங்கியே உள்ளது.
நீ அழுதால் நான் ஒருபோதும் சிரிக்கப்போவதில்லை. மனிதர்கள் என் முன் வரும் போது அவர்களின் குறை நிறைகளை காட்டுவதே என் கடமை. உள்ளதை உள்ளவாறு சொல்பவர்களுக்கு இன்று சமுதாயத்தில் இடமில்லை என்பதனாலோ என்னவோ நானும் இன்று பலருடைய வீடுகளில் மூளைக்கு தள்ளப்பட்டவனாய் இருக்கின்றேன்.
என்னைத்தேடி வந்து தங்களை அழகுபடுத்திக்கொள்வோர் என்னுடைய பிரதிபலிப்பில் மகிழ்ச்சியடைகின்றனர். என்னைப்பற்றி பலரும் பலவிதமாக வர்ணித்த போதிலும், என்னை இந்த சமுதாயத்திற்கு ஒப்பாக சொல்வதை நான் மிகவும் விரும்புகிறேன். நீஙகள் என் முன் எதை செய்கிறீர்களோ நானும் அதையே தான் உங்களுக்கு திருப்பித்தர தயாராக உள்ளேன்.
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என நீங்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு ஆனால் என்னிடம் வரும் போது அதை மறந்துவிடுகிறீர்களே. என் முன் ஒரு குழந்தை வரும் போது எவ்வளவு அழகாக தெரிகிறது, அதற்கு நான் காரணம் அல்ல அக்குழந்தையின் கள்ளம் கபடமில்லாத உள்ளமே காரணம்.
நீங்களும் அழகான எண்ணங்களுடன் என் முன் வந்தால் உங்களையும் பேரழகாக காட்டுபவன் முதலில் நானாகத்தான் இருப்பேன். உங்களின் எண்ணங்களின் வெளிப்பாடே உங்கள் தோற்றமாக என்னால் காட்டப்படுகிறது.
எனவே என் மன எண்ணங்கள் யாருக்குத் தெரியப்போகிறது என்ற நினைப்பில் பொறாமை, தீச்செயல், பகை, வஞ்சம், கொடுமை, குறை கூறுதல், விரக்தி, மனஉளைச்சல், எதிர்மரையான சிந்தனை போன்ற எண்ணங்களை உங்கள் மனதில் விதைத்தால் என் முன் நீங்கள் அகோரமானவர்களாகவே தோற்றமளிப்பீர்கள்.” என்று தன் விமர்சணத்தை முன்வைத்தவாறு விடைபெற்றது கண்ணாடி.
கண்ணாடி கூறியதில், அது சமுதாயத்திற்கு ஒப்பானது என்பது என் புத்திக்குள் வெகுவாக விழுந்தது. இந்த சமுதாயத்தில் எதை விதைக்கின்றோமோ அதையே அறுவடை செய்யப்போகின்றோம்.
எனவே நல்ல எண்ணங்களுக்கு நிகரான அழகு சாதணபொருட்கள் இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்றுணர்ந்து, எதிர்மரையான எண்ணங்களுக்கு விடைகொடுத்தவளாய் விருந்திற்கு புறப்பட்டேன்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா என்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்