வார்த்தை தேடும் ஜீவன்….
நன்றியோடு இருப்பது தான் நாயின் இயல்பு. இது நன்றாக தெரிந்தும் “நன்றி கெட்ட நாயே” என்று கூறுவதுதான் மனிதனின் இயல்பு. இன்று மனித சமுதாயத்தில் இருக்கும் துரோகம், ஏமாற்றம், பொய்யான அன்பு, பணம் இருந்தால் கிடைக்கும் ராஜ மரியாதை, மனஅழுத்தம் இன்னும் பல விடயங்கள் மனிதர்கள் மீதான அன்பில் ஒருவித பயத்தினை உருவாக்குகிறது. நம்பிக்கை வைத்தால் ஏமாற்றம் கிடைக்குமோ என்ற எண்ணம் எங்களுள் எழுகிறது. இப்படிப்பட்ட உலகில் எம்மீது அளவுகடந்த அன்போடு எதுவித எதிர்பார்ப்பும் இன்றி எமக்காக துடிக்கும் ஒரு ஜீவன் தான் “நாய்”. செல்லப்பிராணி என்றாலும்கூட நாம் பெரிதாக என்ன செய்துவிட்டோம் அதற்கு. எமக்கு ஒன்றென்றால் துடிதுடித்தும் போகும் அந்த இதயத்திற்கு உணர்ச்சிகள் இல்லை என்று ஒதுக்கிவிட முடியுமா? கோபத்தில் சற்று அதட்டிவிட்டால் செல்லாமக கோபம் கொண்டு மீண்டும் நாம் அழைத்ததும் வாலாட்டிக்கொண்டு ஓடி வரும் அந்த மனத்தினை மிருக குணம் கொண்டது என்று தள்ளி வைக்க முடியுமா? வேலைக்கு சென்று வீடு திரும்பும் எஜமானின் வருகைக்காக காத்திருந்து, அவர் வரும் வாசனை தெரிந்தவுடனே ஓடிச் சென்று காலையே சுற்றி சுற்றி வந்து “ஏன் இவ்வளவு நேரம் என்னை விட்டு விட்டு சென்றீர்கள்” என்பதை வாய் விட்டு கேட்க முடியாமல், அது படும் பாட்டினை பார்த்தால் கண்களில் நீர் சொட்டாத மனிதா? மூன்று நேரமும் நாம் கொடுக்கும் உணவிற்காக இத்துனை அன்பும் விசுவாசமும் ஒரு உயிரிடத்தில் உள்ளது அதிசயம் தான்.
ஒவ்வொரு நாளும் மனிதர்களின் அன்புக்காக ஏங்கி,ஏமாற்றமடைந்து, துரோகங்களையே சந்தித்து வாழ்வில் விரக்தியடையும் நாம், எமது செல்லப்பிராணியின் அன்பிற்கு தகுதியானவர்களா என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம். சாதரண மிருகம் தானே அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று நினைப்பீர்களானால், நீங்கள் இன்னும் உண்மை அன்பினை உணராதவராகத் தான் இருக்கக் கூடும்.
தன் அன்பினை வெளிப்படுத்த வார்த்தை தேடும் அந்த ஜீவனின் அதீத அன்பை உணர்துவிட்டால், இந்த உலகில் இன்னும் உண்மையான அன்பிற்கு இடமுண்டு என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வீர்கள். எம்மோடு சிரித்து விளையாடி, எமக்காக கண்ணீர் விடும் மென்மையான இதயம் படைத்த உயிரினம், கடைசி வரை எம்மிடம் எதையுமே எதிர்பார்ப்பது கிடையாது, எம் அன்பைத் தவிர.
வாய் விட்டு சொன்னால் தான் உண்மையான அன்பா? அதனை செயலில் காட்டினால் போதும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் எம் செல்லப்பிராணி நாய். மிருகம் தானே என்று ஒதுக்காமல் ஒவ்வொரு உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவோம். அன்பினால் உலகை ஆள்வோம்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.