தொலை தூரமாய் ஒரு வீடு!!
பரபரப்பான நாளின் மாலை நேரம், என்ன இந்த வாழ்க்கை, இந்த வீட்டில் நிம்மதியே இல்லை என்ற சலிப்புடன் சற்று ஓய்வாக வீட்டு முற்றத்து இருக்கையில் அமர்ந்திருந்த நேரம் அது. மாலைத் தென்றல் இதயம் வருட, தொலை தூரத்தில் இருந்த அந்த வீட்டை நோக்கி நகர்ந்து சென்றது மனம்.
மலைத் தொடர்களுக்கும் வரிசையாக தென்பட்ட மரங்களுக்கு இடையில் விரல்விட்டு எண்ணும் அளவு வீடுகள் தான். அதிலும் இளம் பச்சை நிற வர்ணம் பூசப்பட்டு இயற்கையோடு இயற்கையாக இருந்த அந்த வீடு, மனதிற்குள் ஒரு ஏக்கத்தை உருவாக்கியது.
அமைதியான சூழல், எழில் கொஞ்சும் இயற்கை, சுற்றிலும் மரங்கள், பஞ்சமில்லா தென்றல், தென்றல் மோத நாணத்தில் மலர்கள், மலர் தேடி விரைந்து வரும் வண்ணாத்தி, கீச்சிடும் பறவைகள், வான்தொடும் மேகங்கள், மறைந்திருந்து பார்க்கும் சூரியன், சூரியனை கண்டு ஒளிந்துக்கொள்ளும் பனிமூட்டம், பனிப் போன பின் வரும் ஒளி என மனதிற்குள் ஒளி வீசிக்கொண்டிருக்கையில் அந்த வீட்டில் ஒருவராய் ஆனது என் ஆன்மா.
அந்த நேரத்தில் திடீரென என்னைத் தொட்டுச் சென்ற பறவையின் சிறகு, சொல்லாமல் சொன்னது இது தான். இருக்கும் இடத்தில் உள்ள அழகை இரசிக்க தெரிந்தவனுக்கு தீ எரியும் முட்செடியும் சொர்கமே. அமைதியான உள்ளம் எதுவென்றால் இருப்பதைக் கொண்டு திருப்தியடைத் தெரிந்த உள்ளம் மட்டுமே. எந்நேரமும் எதையோ ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக தேடிக்கொண்டிருக்கும் இதயம் அமைதியை இழந்துவிடும். தன்னிடமுள்ளதை பகிர்ந்துகொள்ள தேடிக்கொண்டிருக்கு இதயம் இன்பம் அடையும்.
அந்த நொடியில் நான் உணர்ந்தது, இக்கரையில் உள்ளவருக்கு அக்கரை அழகுதான். ஆனால் இந்த கரையிலும் அழகு உள்ளது என்பதை புரிந்து அனுபவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்பமும் துன்பமும் எம்மை சுற்றித்தான் உள்ளது, தெரிவுசெய்து கொள்வது அவரவர் கையில் உள்ளது என்ற தீர்மானத்தோடு வீட்டிற்குள் நகர்ந்தது என் கால்கள்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.