fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

பேருந்து பயணம் போல் வாழ்க்கை

இதுவும் கடந்து போகும் என்பார்கள். வாழ்வில் சில பயணங்களும் இது போலதான், வாழ்க்கைப்பயணமும் இது போலதான்.

பேருந்து பயணத்தில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது?
பேருந்தில் நாம் ஏறும் போது வெறுமனே கால் போன போக்கில் ஏறுவது கிடையாது. எமக்கான இலக்கு என்ன, எங்கே செல்லப்போகின்றோம் என்ற ஒரு முடிவில் தான் எமது பயணத்தை ஆரம்பிக்கின்றோம். எமது இலக்கை அடைய எது இலகுவான வழியோ அந்த பாதையில் செல்லும் பேருந்தை நாம் தெரிவு செய்கின்றோம்.

இப்போது பயணத்திற்கு வருவோம், பேருந்தில் ஏறியதும் சிலவேளைகளில் பயணம் ஆரம்பிக்கும் முன்னரே எமக்கான இருக்கையை நாம் முன்பதிவு செய்திருக்கலாம். அல்லது உடனே இருக்கை கிடைக்காமல் சிறிது தூரம் சென்றதும் கிடைக்கலாம். அல்லது பயணம் முடியும் வரை இருக்கை கிடைக்காமலே போகலாம். இதே போல தான் எம் வாழ்க்கைப் பயணத்திலும், எமது இலக்கை அடைய தேவையான வசதிகள் உடனே கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். இருக்கை இல்லை என்பதற்காக பாதியில் பேருந்தை விட்டு இறங்காமல் தொடர்ந்து பயணிப்பது போல வாழ்க்கைப் பயணத்திலும் எமது இலக்கை நோக்கி தொடரந்து பயணிக்க வேண்டும்.

தினமும் ஒரே பேருந்தில் அல்லது ஒரே பாதையில் பயணிப்பவராக இருந்தால், சிலநேரங்களில் ஓர் வெறுப்புத்தன்மை எம்மை ஆட்கொள்ளும். ஆனால் நாம் பயணிக்கும் பாதையில் இருக்கக்கூடிய சுவாரஸ்யமான விடயங்களையும் இயற்கையையும் இரசிக்க ஆரம்பித்துவிட்டால் எம் பேருந்து பயணம் மிகவும் அழகானதாக மாறிவிடும். தினமும் அந்த பயணத்திற்காக எம் மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். ஆர்வமாக அமையும் பயணம் மனதிற்கு அமைதியையும் சந்தோஷத்தையும் தர ஆரம்பித்துவிடும். என்ன தான் தடைகள் ஏற்பட்டாலும் அந்த பயணம் எமக்கு சந்தோஷத்தை தரும் வண்ணம் அமையும்.
எமது வாழ்க்கையும் இப்படித்தான், ஒரு நேர அட்டவணைக்கேற்ப பயணித்துக்கொண்டிருக்கிறது. எல்லா நாளும் ஒன்று போல் இருக்காது, ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும், கவலைகளையும், துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றை சமாளித்து பயணிக்க ஆரம்பித்தால் எமது வாழ்க்கைப் பயணத்தை நாம் விரும்ப ஆரம்பித்துவிடுவோம். வாழ்க்கைப் போகும் போக்கில் இருக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இரசிக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானதாக அமையும்.

பேருந்தில் அனைவரும் விரும்பி பயணிப்பது கிடையாது. சிலர் கட்டாயத்தினால் பயணிப்பர், சிலர் வேறு வழி இல்லாமல் பயணிப்பர், இன்னும் சிலர் தேவைக்காக பயணிப்பர் ஒரு சிலர் மட்டுமே இரசனையோடு பயணிப்பர். வாழ்க்கைப் பயணத்திலும் ஒரு சிலர் பிறந்துவிட்டோம் என்று வாழ்வர், ஒரு சிலர் எதற்காக வாழ்கின்றோம் என்று தெரியாமலே வாழ்வர், ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கையை இரசித்து வாழ்வர். ஒரே பேருந்து ஒரே வித சலுகைகள் ஆனால் அவரவர் இலக்கு வேறு, ஒரே உலகம் ஒரே வாழ்க்கை அவரவர் இலட்சியங்களும் சூழ்நிலைகளும் வேறு.
எது எப்படி இருந்தாலும் இரசனை இல்லாத பேருந்து பயணம் எப்படி நீண்டதாக தெரியுமோ, இரசனை இல்லாத வாழ்க்கையும் மிக கடினமானதாக தோன்றும். பேருந்து பயணமோ, வாழ்க்கைப் பயணமோ ஆசையுடன் பயணித்தால் இந்தப் பயணம் இன்னும் கொஞ்ச நேரம் தொடராதா என்ற ஆவல் வந்துவிடும். இரசித்து வாழ்வோம். மகிழ்ந்து பயணிப்போம்.

இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனிகுமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button