யாழில் மகளுக்கு கொரோனா தொற்று என்றதும் தப்பியோடமுயன்ற தாயார்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில் அவரை விரட்டிப் பிடித்த வைத்தியசாலை ஊழியர்கள், அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கும் தொற்று உறுதியானது. கடந்த 9ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.
எழுதுமட்டுவாளை சேர்ந்த பெண்ணொருவர் தனது 25 வயதான மகளை காய்ச்சல், உடல் சோர்வுடன் வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருந்தார். இதன்போது யுவதிக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, தாயாருக்கும் அன்டிஜன் சோதனை மேற்கொள்ள வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், தயாரானதுடன் தாயாரை பதிவு செய்து விட்டு வருமாறு கூறியுள்ளனர்.
இந்நிலையில் பதிவு செய்யும் சாக்கில் அங்கிருந்து அகன்ற தாயார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் நிற்குமாறு கூறியபோதும் அதனை காதிவாங்காது அங்கிருந்து நகர்ந்தார்.
இதனையடுத்து அவரை விரட்டிச் சென்ற வைத்தியசாலை சிற்றூழியர்கள் அவரை பிடித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.