ஆடைகள் வாங்கும் போது பெண்கள் செய்யும் தவறுகள்!
பெண்கள் டிரெண்டிங்கில் இருக்கும் பேஷன் உடைகளை வாங்கி அணிய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடைகளில் அதனை ஆடையாக பார்க்கும்போது அழகாக இருக்கும். ஆனால் அவர்கள் அணிந்து பார்க்கும்போது அது எடுபடாமல் போய்விடும். அதற்கு என்ன காரணம்? ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது பெண்கள் குறிப்பாக ஐந்து தவறுகளை செய்கிறார்கள். அந்த தவறுகள் நிகழாமல் இருந்தால் அவர்கள் ஆடை- அணிகலனில் அபாரமாக ஜொலிப்பார்கள்!
அதிக அளவில் ஆபரணம் அணிதல்: வளையல்கள், இந்திய பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதிய வயது பெண்கள் வரை வளையல் அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் ஆடைகளை தேர்வு செய்யும்போது அவற்றின் நிறத்திற்கு ஏற்ற வண்ணமயமான வளையல்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சிலரோ கைக்கடிகாரம் அணிந்திருக்கும் கையிலும் வளையல்களை அணிகிறார்கள். இது பேஷன் தவறுகளில் முக்கியமானதாகும். வளையல் அணியும்போது கைக்கடிகாரம் அணியாமல் இருப்பதுதான் சரியானது. ஒருவேளை கைக்கடிகாரம் அணிய விரும்பினால் அந்த கையில் கடிகாரத்தை மட்டுமே அணிய வேண்டும். மற்றொரு கையில் வளையல்களை அணிந்து கொள்ளலாம். அதேபோல் உடுத்திருக்கும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப அணியும் வளையல்கள் பொருத்தமாக இருக்க வேண்டும். அதிக வளையல்கள் அணிவதும் நல்லதல்ல. அதிக ஆபரணங்கள் அணிவது ஆடைகளின் அழகை கெடுப்பதோடு, ஒட்டுமொத்த அழகையும் குன்றச்செய்துவிடும்.
கூந்தல் அலங்காரம்: பெரும்பாலான பெண்கள் கூந்தல் அலங்காரத்தில் தவறு செய்கிறார்கள். ரப்பர் பேண்ட், பின்கள், ஹெட்பேண்ட் போன்றவற்றை ஒரே சமயத்தில் பயன்படுத்த வேண்டியதில்லை. கூந்தல் அலங்கார பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று நினைப்பது தவறானது. அதில் ஒன்றிரண்டை பயன்படுத்தினாலே போதுமானது. சில சமயங்களில் ஜடை பின்னி அலங்காரம் செய்துகொள்ளலாம். அதுவும் அழகான தோற்றத்தைத் தரும். ஒட்டுமொத்த கூந்தல் அலங்காரத்தையும் செய்துமுடித்துவிட்டு, ஒருமுறை கண்ணாடியில் பார்த்து திருப்தி அடைந்த பின்பு வெளியே கிளம்புங்கள்.
மேக்கப்பில் கவனம் தேவை: மேக்கப் போடுவது ஒரு கலை. அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக அனைத்து மேக்கப் வகைகளையும் ஒரே நேரத்தில் முயற்சித்து பார்ப்பது அழகை கெடுத்துவிடும். ஐ ஷேடோ, லிப் பாம் போன்றவைகளே அன்றாட அலங்காரத்திற்கு போதுமானது. ஐ லைனர், பிளஷ், ஷிம்மர், லிப் கலர் போன்றவைகளை திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷ தினங்களில் பயன்படுத்தலாம். பேஷியல் மேக்கப் போடும்போது சருமத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஒரு பகுதியில் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தால் அதனை முழுமைப்படுத்திய பிறகு அடுத்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்களுக்கு ஒப்பனை செய்ய விரும்பினால், உதடு களுக்கு கனமான லிப்ஸ்டிக் ஷேடுகளை தவிர்க்க வேண்டும். கண் ஒப்பனைக்கு பயன்படுத்தும் மஸ்காராவும், உதட்டுக்கு உபயோகிக்கும் லிப் பாமும் மிதமாக இருக்க வேண்டும். லிப் லைனர், லிப்ஸ்டிக் ஷேடு போன்றவற்றின் தேர்வில் கவனம் தேவை. இல்லாவிட்டால் முகப்பொலிவு மங்கிவிடும்.
கனமான நகைகள் அணிதல்: அதிக கனமான மற்றும் அளவுக்கு அதிகமான நகைகளை அணிவதும் பேஷனுக்கு பொருத்தமாக அமையாது. பல பெண்கள் கனமான நெக்லஸ், காதணிகளை அணிகிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள்தான் கனமான அணிகலன்களை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அணிகலன்களில் அதிக கவனம் செலுத்தும்போது ஆடையின் அழகு குறைந்துபோய்விடுகிறது. வித்தியாசமான உடைகளை விரும்பி அணியும்போது குறைவான எடைகொண்ட தோடுகளை அணிந்தால்போதும்.
வண்ணங்களின் தேர்வு: அணியும் ஆடையில் அதிக நிறங்கள் இடம்பெற்றிருப்பதும், ஒரே நேரத்தில் பல வண்ண நிறங்களை கொண்ட அணிகலன்களை அணிந்து அழகு பார்ப்பதும் பேஷனில் செய்யும் மற்றொரு தவறாகும். சரும நிறத்திற்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். நக பூச்சும் அணியும் ஆடை, சருமத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். வெளி இடங்களுக்கு செல்லும்போது உடுத்தும் உடைக்கு ஏற்ற ஹேண்ட் பேக்கையும் தேர்வு செய்யுங்கள்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.