மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 6 (இறுதி பகுதி)
6. கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(3)(உ) அரசியலமைப்பின்
19(1)(a), 19(1)(g ) ஐ மீறுகின்றதா என்பது பற்றிய பகுப்பாய்வு
இங்கு வாதி உறுப்புரை 19(1)(a ) வெளிநாடு செல்வதற்கான உரிமையானது பேச்சு
மற்றும் வெளிப்படுத்தலுக்கான சுதந்திரத்தின் உள்ளார்ந்த பகுதி என குறிப்பிட்டார்.
வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டம் அல்லது நிர்வாக நடவடிக்கையானது பேச்சு
மற்றும் வெளிப்படுத்தலுக்கான சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
நீதியரசர் பகவதி இந்த வாதத்தை மறுத்ததுடன் உறுப்புரை 19(1)(a ) ஆனது வெளிநாடு
செல்லும் உரிமையை உள்ளடக்கவில்லையென கூறினார்.
“the argument put forward was that the right to go abroad was not integrally connected with the freedom of speech and expression, nor did it partake of the same basic nature and character and hence it was not included in the tight of free speech and expression guaranteed under Article 19(1) (a) and imposition of restriction on it did not involve violation of that Article.”
மேலும் உறுப்புரை 19(1)(g) ஆல் வெளிப்படுத்தப்படும் உரிமையான தொழில் அல்லது
வியாபாரத்தை நடத்துவதற்கான உரிமையும் வெளிநாடு செல்லும் உரிமையையும்
உள்ளடக்கும் என்ற வாதமும் நீதியரசரால் மறுக்கப்பட்டது.
7. வெளிப்படுத்துகை மற்றும் பேச்சுரிமைக்கான சுதந்திரம் தொடர்பான
ஆள்புல எல்லை பற்றிய பகுப்பாய்வு
மேலே கூறப்பட்டுள்ள உறுப்புரை 19(1)(a ) தொடர்பிலே வெளிப்படுத்தல் மற்றும்
பேச்சுரிமைக்கான நோக்கெல்லை தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது. எதிர்வாதி
உறுப்புரை 19(1)(a ) ஆனது இந்திய ஆள்புலத்திற்கு வெளியே பிரயோகிக்கப்படமுடியாது
என்பதால் குறித்த உறுப்புரை வெளிநாடு செல்வதற்கான உரிமையை உள்ளடக்காது
என வாதிட்டார். ஆனால் மேலே வழங்கப்பட்ட தீர்ப்பில் குறித்த உறுப்புரை
வெளிநாடுசெல்லும் உரிமையை உள்ளடக்காது என்பதனை ஏற்றுகொண்டாலும்
அதற்கான காரணமாக பிரதிவாதியின் வாதத்தை ஏற்கவில்லை.
நீதியரசர் பகவதி தனது தீர்ப்பில் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை மேற்கோள்
காட்டினார். இந்தப்பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதனின் பிரிக்கமுடியாத
உரிமைகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தில்
காணப்படுகின்றது. இந்த பிரகடனத்தின் உறுப்புரை 13 கருத்து வெளிப்படுத்தலுக்கான
சுதந்திரத்தை பற்றி கூறுகின்றது.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னராகவே உலகலாவிய ரீதியில்
மேற்படி பிரகடனம் ஏற்றுகொள்ளப்பட்டமையால் உறுப்புரை 19(1)(a) ஆனது
இந்தியாவிற்கு அப்பாலும் பிரயோகிக்கப்படலாம் என தீரப்பில் கூறப்பட்டது.
“fundamental freedom of speech and expression noble in conception and universal in scope- which was before them when the constitution-makers enacted Article 19 (1) (a). We have, therefore, no doubt that freedom of speech and expression guaranteed by Article 19(1) (a) is exercisable not only in India but outside.”
தீர்ப்பின் இந்தப்பகுதியானது இந்திய பிரஜைகளின் கருத்து சுதந்திரம் தொடர்பில் பாரிய
மாற்றத்தை ஏற்படுத்தியது. இக்கருத்து தீர்ப்பிடைக்கூற்றாக இருந்த போதிலும்
இந்தியாவின் உயர்நீதிமன்றங்கள் இக்கருத்தை அடிப்படையாக வைத்து பல
தீர்ப்புக்களை வழங்கியுள்ளன.
முடிவுரை
மேனகாகாந்தி வழக்கு தீர்ப்பில் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பில் பரந்தளவில்
பொருள்கோடல் செய்யப்பட்டமை இந்திய நீதித்துறையில் ஏற்பட்ட புதிய மாற்றமாக
நோக்கப்படுகின்றது. அத்துடன் பல பிற்கால நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு இது
முன்மாதிரியாக அமைந்தது. உறுப்புரை 21ல் வெளிப்படுத்தப்பட்ட தனிப்பட்ட
சுதந்திரத்திற்கான உரிமைக்கு, உறுப்புரைகள் 14, 19 மூலம் மேலதிக பாதுகாப்பு
வழங்கப்பட்டது.
இயற்கைநீதி கொள்கைகள,; நிர்வாக மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில்
இன்றியமையாத கூறு என்பதனையும் இவ்வழக்கு உறுதிப்படுத்தியது. சட்டத்தால்
தாபிக்கப்பட்ட நடபடிமுறைகள் என்ற வாசகம் சட்டத்தின் முறையான நடவடிக்கை
என்பதன் அர்த்தத்திற்கு அண்மித்து பாவிக்கப்பட்டமை மிகமுக்கிய அம்சமாகும்.
தீர்மானத்திற்கு பின்னரான கோட்பாடு(Post Decisional Doctrine) இந்த
வழக்கிலிருந்தே உருவாக்கம் பெற்றது.
மேலும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இந்திய
ஆள்புல எல்லைக்கு அப்பாலும் தொழிற்படும் என கூறப்பட்ட தீர்ப்பிடைக்கூற்றும்
முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தவழக்கு தீர்ப்பில் சட்டவியலின் இயற்கைசட்ட மற்றும்
அமெரிக்க யதார்த்தவாத கோட்பாடுகள் உள்ளடக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். மேலும்
சட்டவியலின் சமூகவியல் சிந்தனைப்பிரிவின் நலன்கள் தொடர்பான விடயங்களும்
மட்டப்படுத்தப்பட்ட அளவில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.