மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 2
வழக்கு பிரச்சினைகள் (Issues)
இந்த வழக்கில் முதலில் கடவுச்சீட்டு முடக்கலுக்கான காரணங்கள் வழங்கவில்லையென்றும் நேரடி விளக்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் தனிப்பட்ட சுதந்திரம், பேச்சுரிமை மற்றும்
வெளிப்படுத்தலுக்கான சுதந்திரம் போன்றவையும் மீறப்படுவதாக சவாலுக்குட்படுத்தப்பட்டது.
சமூக மாற்றத்தின் விளைவால் புதிய பரிமாணத்தில் நோக்கப்படும் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பான எல்லை விரிவாக்கப்பட்டதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும் சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடைமுறை எனும் வாசகம் சட்டத்தின் முறையான நடவடிக்கை என்ற வாசகத்திற்கு ஒப்பான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டமை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புதிய கண்ணோட்டத்தில் நோக்க உதவியது. அத்துடன் இயற்கை நீதியுடன் தொடர்பான நிர்வாகச்சட்டத்தின் வளர்ச்சியிலும் இவ்வழக்கு தீர்ப்பு பங்களிப்பு செய்தது. இவ்வழக்கு தீர்ப்பு நியாயம் பல பிரச்சினைகளுக்கு விடையாக அமைந்ததால் இன்றுவரை மிக முக்கியமான முற்தீர்ப்பாக கருதப்படுகின்றது.
இங்கு விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் கீழே தரப்பட்டுள்ளன.
• சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை என்ற வாசகத்தின் நோக்கெல்லை
எதுவரை பிரயோகிக்கப்படலாம்?
• உறுப்புரைகள் 14, 19, 21 ற்கிடையில் தொடர்பு உள்ளதா?
• உறுப்புரை 21ல் உள்ளடங்கும் உரிமைகளில் வெளிநாடு செல்வதற்கான
உரிமையை உள்ளடக்குகின்றதா?
• கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(3)(c) அரசியலமைப்பின் உறுப்புரை 21ஐ
மீறுகின்றதா? இங்கு இயற்கை நீதி விதிகள் மீறப்பட்டுள்ளதா?
• கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(3)(c) அரசியலமைப்பின் உறுப்புரை 14ஐ
மீறுகின்றதா?
• கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(3)(c) அரசியலமைப்பின் உறுப்புரை 19(1)(a),
19(1)(g) ஐ மீறுகின்றதா?
• வெளிப்படுத்துகை மற்றும் பேச்சுரிமைக்கான சுதந்திரம் இந்திய ஆள்புல
எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதா?
மேற்படி பிரச்சினைகளுக்கு தெளிவான விளக்கம் வழங்கும் விதமாக வழக்கு தீர்ப்பு
அமைந்திருந்தது. அதில் உள்ளடங்கியுள்ள அடிப்படை விடயங்களும் அது பற்றிய
பகுப்பாய்வும் கீழே விரிவாக தரப்பட்டுள்ளது.
வழக்கு தீர்ப்பு தொடர்பான பகுப்பாய்வு
இந்த வழக்கின் பின்னராக அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பான
பார்வை புதிய வடிவத்தை பெற்றது. ஏற்கனவே கூறப்பட்டதைப்போன்று இந்த வழக்கு தீர்ப்பு, அரசியலமைப்பு உறுப்புரை 21 இன் நோக்கெல்லையை விரிவுபடுத்தியதுடன் இந்திய குடியரசின் அரசியலமைப்பு முன்னுரையில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக அது
நலன்புரி அரசு(Welfare State) என்பதையும் உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதான தீர்ப்பை வழங்கியது.
அதில் பெரும்பான்மையான கருத்துக்கள் நீதியரசர் பகவதி அவர்களால் உன்ட்வாலியா
மற்றும் பைசல் அலி ஆகியோருடன் இணைந்து வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் பெக்,
சந்திராசூட், கிருஸ்னா ஐயர் ஆகியோர் தனியான தீர்ப்புக்களை வழங்கினாலும் பகவதி
குழுவினரின் பெரும்பான்மை கருத்துக்களில் உடன்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் எதிர்வாதியான சட்டமா அதிபர் கடவுச்சீட்டு முடக்கப்பட்டமை
தொடர்பில் விளக்கம் வழங்க வாதிக்கு சந்தர்ப்பமளிப்பதாக கூறியமையால்
சவாலுக்குட்படுத்தப்பட்ட கட்டளை தொடர்பில் நீதிமன்றத்தால் முறையான கட்டளை
வழங்கப்படவில்லை. எனினும் இவ்வழக்கின் தீர்ப்பு நியாயம் மற்றும்
தீர்ப்பிடைக்கூற்றுக்கள் பின்னைய வழக்குகளுக்கு பிணிக்கும் தீர்ப்புகளாகவும்,
தூண்டுவிக்கும் தீர்ப்புக்களாகவும் அமைந்தன.
தொடரும்