வரிசையில் வாழ்க்கை
“பணம் பத்தும் செய்யும்” என்பார்கள். அந்தப் பணமும் தெருவிற்கு வரும் காலமாகிவிட்டது இன்று. வரிசைக்கு பஞ்சமில்லாமல் நின்றுகொண்டிருக்கும் நேரம், எம் எண்ணங்கள் என்ன சொல்லும்?
ஓர் பணக்காரர் பெட்ரோல் வரிசையில் நின்றுகொண்டு, “வரிசையில் இருக்கும் இவ்வளவு நேரத்தில் ஆயிரக்கணக்கில் என்னுடைய வியாபாரம் நட்டமடைகிறதே. இதனை எவ்வாறு ஈடுசெய்வதென்றே தெரியவில்லை. இப்படியே தொடர்ந்தால் என்னுடைய முதலீட்டைக்கூட என்னால் பெற முடியாமல் போய்விடும் நிலை ஏற்படலாம். எவ்வாறு நான் என் இலாபத்தை அதிகரித்துக்கொள்வது?” என்ற கவலையில் இருப்பார்.
இதுவே ஒரு ஏழை, ” இங்கேயே இவ்வளவு நேரம், அடுத்து உணவு வரிசைக்கு செல்லும் போது என் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப வாங்குவதற்கு பொருட்கள் இருக்குமோ தெரியவில்லையே, இன்றைய நாள் என் உழைப்பும் இந்த வரிசையில் முடங்கிவிட்டது, வீட்டிற்கு போனதும் பசியுடன் என் கையை பார்க்கும் என் குடும்பத்தினருக்கு நான் என்ன பதில் சொல்வேன். நாளையும் இதே நிலை தானோ?” என்ற வேதனையோடு இருப்பார்.
வரிசையில் நிற்கும் தாய்மாராகள், ” என் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ? நாம் பெறாத இன்பத்தையும் செல்வத்தையும் கொடுத்து உன்னை வளர்க்க கனா கண்டோமே, இன்று நாம் பெற்ற எதையும்கூட உனக்கு கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறதே. உனக்கு சிறந்த கல்வியை தருவதா, நல்ல ஆரோக்கியத்தை தருவதா என்ற குழப்பத்திற்கு என்று தான் தீர்வு கிடைக்கும்?” என்ற சந்தேகங்களோடு இருப்பர்.
தனியாக வீட்டில் விட்டுவிட்டு வர முடியாத காரணத்தால், வரிசைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்கள், ” இன்னும் எவ்வளவு நேரம் இதில் நிற்க வேண்டும்? எப்போது கிடைக்கும் நாம் வரிசையில் நிற்கும் பொருள்? நாம் எத்தனையாவதாக நிற்கின்றோம்? நான் எப்போது வீட்டுப்பாடம் செய்வது? நான் விளையாடப் போக முடியாத? தரையில் அமர்ந்துகொள்வோமா? எனக்கு கால் வலிக்கிறது. வீட்டிற்கு போவோமா? Onlineயில் இதனை ஓடர் செய்ய முடியாதா? நாம் பணம் கொடுத்து தானே வாங்குகிறோம்? ” இப்படி பதில் இல்லாத ஆயிரம் கேள்விகளை கேட்ட வண்ணம் நிற்பர்.
வரிசையில் நிற்கும் நாளைய தலைவர்கள், இன்றைய இளைஞர்கள், ” இப்படி நிற்க வெட்கமாக உள்ளதே, என் நண்பர்கள் கண்டால் என்னை கிண்டல் செய்வார்களே, இதில் நின்றுவிட்டு வீடு திரும்பும் போது உடலுக்கும் மனதிற்கும் சோர்வாக உள்ளது, இனி என்னவென்று தான் படித்து முன்னேறுவதோ தெரியவில்லை. எம் எதிர்காலமும் வரிசையில் தானோ தெரியவில்லை. என்னை நம்பியுள்ள குடும்பத்தை நான் எவ்வாறு கரை சேர்ப்பது? எனக்கென்று ஓர் வாழ்க்கையை நான் எப்படி உருவாக்குவது? ” இப்படி வாழ்க்கை பற்றிய யோசனையோடு நகர்வர்.
ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தாலும், அனைவருக்கும் அது ஒரே மாதிரியான வரிசை அல்ல. வாழ்க்கைப் போராட்டத்தில் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் வரிசை தான் நாளைய சமுதாயம். மிக நீண்ட வரிசைகளில் பணத்தை செலவழிக்க காத்திருந்தாலும், செலவாவதென்னவோ எம் பொன்னான நேரம் தான். வரிசையில் தான் வாழ்க்கை என்றானபின், அடுத்தவர் முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படும் குணம் இத்தோடு அழிந்துவிடும் என்று எண்ணியாவது மகிழ்ந்து கொள்வோம்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனிகுமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.