IMF இன் நிபந்தனைகளை அமுல்படுத்தினால் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வர் – கப்ரால்
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தினால் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள் என்ற காரணத்தினால் நாணய நிதியத்தை நாங்கள் நாடவில்லை.
வங்குரோத்து அடைந்து விட்டோம் என்ற தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு அமையவே வரி மற்றும் சேவை கட்டணங்கள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மின்கட்டண அதிகரிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக உள்ளது.
நிவாரணம் மற்றும் சேவை வழங்கலை மட்டுப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு அல்ல.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடு,மொத்த சனத் தொகையில் பெரும்பாலான மக்கள் அரச நிவாரணங்களையும்,இலவச சேவைகளையும் நம்பி உள்ளார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய இலவச சேவைகளை மட்டுப்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.
இதனால் தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நாங்கள் அதிக ஈடுபாடு காட்டவில்லை.
கொவீட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்தது.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அரசியல் தரப்பினர் நாட்டை முடக்குமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்தார்கள்.
அரசியல் தரப்பினரது நோக்கத்திற்கமைய பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடு முடக்கப்பட்டது.இறுதியில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளாமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சீனா,இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருதரப்பு மற்றும் பல்தரப்பு அடிப்படையில் ஒத்துழைப்புக்கள் கோரப்பட்டன.
இவ்வாறான நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது.
ஆகவே அரச முறை கடன்களை மீள் செலுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.
இதனால் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடைந்து சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் வெளிநாட்டு கடன்கள் முறையாக செலுத்தப்பட்டன.எந்த அடிப்படையில் கடன்மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தது என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
பாராளுமன்றத்திற்கும் அறிவிக்கப்படவில்லை,ஆகவே வங்குரோத்து என்ற தீர்மானம் மறுசீரமைக்கப்பட்டால் ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்கலாம் என்றார்