நாம அடி வாங்காத ஏரியாவே இல்லை
வீழ்வது மீள பலமாக எழுவதற்கே
எம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வீழ்தல் என்பது அடிக்கடி நிகழும் ஒரு சம்பவமாகும் (How to win life). நாம் சிறுவயதில் முதன்முதலில் நடக்கும் போது விழுந்திருக்கின்றோம்,பின்னர் முதன்முதலாக சைக்கிள் ஓடக்கற்றுக்கொள்ளும் போது விழுந்திருக்கின்றோம்.
நாம் ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை எமது உடலில் ஏற்பட்ட காயங்களை நினைத்துப்பார்க்கும் போது அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு நினைவுகளை எமக்குத் தந்திருக்கும்.
அனுபவமே சிறந்த ஆசான்
அது இன்றுவரை எமக்கு நினைவிலிருக்கும்.இந்த ‘வீழ்தல்’ வாழ்க்கையின் மிக முக்கியமான பாடத்தை எமக்கு கற்றுத்தருகின்றது. சிறிய வயதில் எமது பெற்றோர் எமக்கு கூறும் ஒரு விடயம்,சைக்கிள் ஓடப்பழகும் போது கட்டாயம் காயம் ஏற்படும்.
ஆனால் அது எமது பிழையை உணர்த்தும் பின் மறுபடியும் ஒழுங்காக சைக்கிள் ஓடக்கற்றுக்கொடுக்கும்.
நாம் ஒவ்வொரு முறையும் விழும் போதும் உடனடியாக எழுந்து நிற்கின்றோம்.
இது எமது உடலின் இயக்கம் சார்ந்த செயற்பாடாக இருந்தாலும் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம் அதற்குள் ஒளிந்துள்ளது. அதாவது ‘தோல்வியிலிருந்து பாடம் கற்றுகொள்தல்’ஆகும்.
தோல்வி அவமானமல்ல
வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காதவன் எதையும் முயற்சி செய்யாதவன் என்று மிகப்பெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூறுகின்றார்.
ஆனால் எம் ஒவ்வொருவருக்கும் தோல்வியின் வேதனைகளும் அது தந்த கசப்பான அனுபவங்களும் நினைவிருக்கும்,அதிலிருந்து எம்மை சரி செய்துகொண்டிருப்போம் அல்லாவிடின் அதே தவறுகளை இப்போது செய்துகொண்டிருப்போம்.
ஆனால் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டியது வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயமாகும்,எனவே எம்மை திருத்திக்கொள்வதற்கு பல சந்தர்ப்பங்கள் உண்டு அதாவது நாம் மீள் எழுந்திருப்பதற்கு அநேகம் வாய்ப்புக்கள் உண்டு.
சிறுபிள்ளையாய் இருந்தபோது நாம் வீழ்ந்த சந்தர்ப்பங்களில் மீண்டும் எழுந்திருக்காவிட்டால் இன்று நாம் நல்ல வேலையிலோ,நல்ல குடும்பமாகவோ அல்லது பைக்கை வேகமாக ஓட்டியிருக்கவோ முடியாது.
தோற்று போவேன் என்ற எண்ணத்தை ஒழியுங்கள்
வீழ்ந்து விடுவோம் என்ற பயம் எம்மை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாது,அத்தோடு சுவாரசியமற்ற தேங்கிய குட்டைநீர் போல அது மாறிவிடும். தோல்வியைக்கண்டு அஞ்சாமல் எந்நேரமும் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருத்தல் வேண்டும்.
அது எம்மை பல புதிய மாற்றங்களைக் கண்டுகொள்ள உதவும்.உதாரணமாக ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு வைத்தியரிடம் செல்லும் போது முதலில் சில மருந்துகளைக் கொடுப்பார்,அதற்கு சரியாகவில்லையாயின் பின்னர் வேறு மாற்று மருந்துகளைக் கொடுப்பார்.
எனவே நோய்குணமாவதற்கு மருந்துகளை மாற்றுவாரே தவிர தலையை மாற்றவேண்டும் எனக்கூறமாட்டார்.
எனவே வாழ்க்கையில் வெற்றிபெற நாம் கையாளும் முறைகள்,தந்திரோபாயங்களை மாற்றவேண்டுமேயன்றி வாழ்க்கையை மாற்றமுற்படக்கூடாது.
வாழ்க்கையில் வெல்லலாம்!
ஆகவே நாம் வீழ்வது உடனே எழுந்திருப்பதற்கு,வீழ்தல் வாழ்வின் வலிகளை எமக்குக்காட்டும் அது நாம் மீண்டுவருவோம் என்ற நம்பிக்கையைத் தரும்.
எனவே வாழ்க்கையில் வீழ்தல் மிகவும் நல்லது,ஏனெனில் தோல்வியுற்ற ஒருவனின் வலியும் வேதனையும் எமக்கு வரும்போது நாம் மற்றவனையும் ஒரு மனிதனாக மதிக்கத்தக்க ஒரு மனம் உருவாகும்.
எம் வாழ்வின் மிகப்பெரிய வெற்றி என்னவெனில், நாம் ஒருபோதும் விழவில்லை என்பதல்ல மாறாக ஒவ்வொரு முறை விழும் போதும் நாம் எழுந்திருப்பதே ஆகும் சீன சென் துறவி கன்பூசியஸ் கூறியுள்ளார்.
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.