fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

ஆண்களின் அழகை பாழ்படுத்தும் பழக்கங்கள்!

பெண்களை போல் ஆண்கள் அழகை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மன அழுத்தம், வேலைப்பளு, குடும்ப சுமை, பொருளாதார நிலைமை, நேரமின்மை, சருமத்தை பராமரிப்பதில் அக்கறையின்மை போன்ற காரணங்கள் அழகு விஷயத்தில் ஆண்களை பின் தங்க வைத்திருக்கிறது. அழகை பராமரிக்காவிட்டாலும்கூட அழகை பாழ்படுத்தும் பழக்கவழக்கங்களை பின்பற்றும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் அசட்டையாக செய்யும் தவறுகள் அழகை கெடுத்துவிடும். அத்தகைய பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போம்.

புகைப்பழக்கம்: புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும அழகுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பொருட்களில் இருந்து வெளியாகும் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. அது சருமத்தில் ஆக்சிஜன் அளவை குறைத்துவிடக்கூடும். மேலும் புகையிலையில் கலந்திருக்கும் நிக்கோட்டின் ரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடியது. இதனால் சரும வறட்சி, நிறமாற்றம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதிகமாக புகைக்கும்போது வாய்ப்பகுதியை சுற்றி சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கி விடும்.

பொடுகு: பெண்களை விட ஆண்கள் பொடுகு பிரச்சினையை அதிகம் எதிர்கொள்வார்கள். முடி பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். பொடுகு பிரச்சினையால் சரும பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி ஷாம்பு அல்லது சிகைக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தி தலைமுடியை சுத்தமாக பராமரித்து வருவது அவசியமானது. சில ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு ஆர்வம் காண்பிக்கமாட்டார்கள். அதுவும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

எண்ணெய்: எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது முகப்பரு பிரச்சினைக்கு வழிவகுக்கும். சரும துளைகளில் அடைப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குளியல் சோப்: சில ஆண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு மாற்றாக குளியல் சோப்பை பயன்படுத்துவார்கள். குளிக்கும்போதும், கை, கால்களை கழுவும்போதும் சோப்பை கொண்டு முகத்தை நன்றாக கழுவுவார்கள். அப்படி எப்போதும் சோப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் வறட்சியடையும். நாளடைவில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கத்தொடங்கி விடும். சோப்புக்கு பதிலாக பேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.

சன்ஸ்கிரீன்: ஆண்கள் வெளி இடங்களுக்கு செல்லும்போது பெண்களை போல சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது நல்லது. அது சூரியக்கதிர் வீச்சில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு தரும். ஆனால் ஆண்கள் பலரும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் விஷயத்தில் ஆர்வம் கொள்வதில்லை. பெண்களை விட ஆண்கள்தான் வெளி இடங்களுக்கு அதிகம் செல்வதால் சூரியக்கதிர் வீச்சு மூலம் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரும சுருக்கமும் உண்டாகும்.

மாய்ஸ்சுரைசர்: இது சருமத்திற்கு மென்மை தரக்கூடியது. பெரும்பாலும் ஆண்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதற்கு விரும்பமாட்டார்கள். சருமத்தை பராமரிப்பதற்கும் அக்கறை கொள்ளமாட்டார்கள். அதனால் சருமம் மென்மை தன்மையை இழந்துவிடும். வறட்சியும் குடிகொண்டுவிடும். தினமும் ஒருமுறையாவது சருமத்திற்கு பொருத்தமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லது.

சுடுநீர்: சூடான நீரில் முகத்தை சுத்தப்படுத்தினால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று சிலர் கருதுகிறார்கள். அப்படி சூடான நீரில் முகத்தை கழுவுவது, குளிப்பது சருமத்தில் உள்ள அனைத்து எண்ணெய்களையும் நீக்கிவிடும். அதன் விளைவாக சருமம் இயற்கையான ஈரப்பதத்தை இழந்துவிடும்.

தூக்கம்: தூங்கும்போது முகத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்தபடி தூங்கும் வழக்கத்தை நிறையபேர் பின்பற்றுகிறார்கள். அப்படி நீண்ட நேரம் தூங்கும்போது சருமத்துளைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். குப்புறப்படுத்து தூங்குவது, தலையணையின் பக்கவாட்டில் தலையை சாய்த்துவைத்தபடி தூங்குவது என முகத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

மொபைல்போன்: இன்றைய யுகத்தில் தவிர்க்கமுடியாத சாதனமாக விளங்கும் மொபைல்போன், பாக்டீரியாக்கள் குடியிருக்கும் இடமாகவும் அமைந்திருக்கிறது. பலரும் மொபைல்போனை தூய்மையாக இருக்கும்படி பராமரிப்பதில்லை. அதனால் அதில் எளிதில் அழுக்குகள் படிந்து, பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்துவிடக்கூடும். அதனை கவனிக்காமல் காதுக்கு அருகில் வைத்து பேசும்போது பாக்டீரியாக்கள் சருமத்தில் படர்ந்து கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button