உணவு கட்டுப்பாடு: திருமணத்துக்கு முந்தைய திட்டமிடல்கள்!
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட உடனேயே மணமகன்-மணமகள் வீடு விழா கோலம் பூண்டுவிடும். திருமண ஆடை, அலங்கார ஷாப்பிங், வரவேற்பு, உபசரிப்புகள், நெருங்கிய உறவினர்கள் அழைப்பு, அழைப்பிதழ் அச்சடிப்பு என திருமண பணிகள் சுறுசுறுப்பு அடைந்துவிடும். திருமண தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் பரப்பரப்பான நாட்களுக்கு இடையே மணமகள், எளிமையான, நிலையான உணவு திட்டத்தை கடைப்பிடிப்பது நல்லது. அதுவே இயற்கையான அழகை பராமரிக்க பக்கபலமாக அமைந்திருக்கும். திருமண கோலத்தில் பார்க்கும்போது அழகுக்கு அழகு சேர்க்கும்.
கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்:
- தினமும் இரவு 7.30 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதில் 30 நிமிட நடைப்பயிற்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
- மினி உணவுக்கொள்கையை பின்பற்ற வேண்டும். அதாவது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தவறாமல் சிறிதேனும் ஏதாவதொரு உணவை சாப்பிட வேண்டும்.
- இதுநாள் வரை துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை விரும்பி சாப்பிட்டிருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக இவற்றையெல்லாம் அறவே தவிர்த்துவிட வேண்டும். முழு கோதுமை, ராகி, ஓட்ஸ், கோதுமை பிரெட், பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். புரதம், பச்சை இலை காய்கறிகள், சாலட்டுகள் உணவில் தவறாமல் இடம்பெற வேண்டும். வெள்ளை அரிசி, அரிசி மாவு, மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற வெள்ளை நிற உணவு பதார்த்தங்களை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
- அவகொடா, நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதை, சியா விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. அவை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கொழுப்புகளாக கருதப்படுகின்றன.
- கீரைகளை மறந்துவிடாதீர்கள். உணவின் ஒரு பகுதியாக ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுங்கள்.
- தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவதை இலக்காக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். எப்போதும் கைவசம் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது நல்லது. எல்லா நேரங்களிலும் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்திருக்க வேண்டும். இளநீர், அதிக நீர்ச்சத்தை உள்ளடக்கிய பழங்கள், காய்கறி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் பருகலாம். அப்படி நீரேற்றமாக வைத்துக்கொள்வது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவும். பொலிவான சருமம், அழகான நகங்கள், பளபளப்பான கூந்தல் போன்ற அம்சங்களை தக்க வைத்துக்கொள்ளவும் உதவும். உடல் எடை குறைவதற்கும் வித்திடும்.
- மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒதுக்கி வையுங்கள். கேக்குகள், பிஸ்கெட், பதப்படுத்தப்பட்ட சாறு போன்ற டிரான்ஸ் கொழுப்பு உணவுகளை தவிருங்கள்.
தினமும் பின்பற்ற வேண்டியவை:
காலை: காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து ஊறவைத்த 4-5 பாதாம், ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். இஞ்சி, எலுமிச்சை கலந்த நீர் அல்லது சீரகம் ஊறவைக்கப்பட்ட நீர் பருகலாம். தண்ணீரில் ஊறவைத்த லவங்கப்பட்டையை சிறிதளவு சாப்பிடலாம். கிரீன் டீ பருகலாம்.
காலை உணவு: இட்லி, காய்கறிகள் கலந்த சாம்பார் அல்லது ஓட்ஸ், உப்புமா சாப்பிடலாம். ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். முட்டையை வேகவைத்தோ, ஆம்லேட்டாகவோ சாப்பிடலாம். சிறிதளவு பப்பாளி அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம்.
காலை 11 மணி: சுண்டல் / வேர்க்கடலை / முளையிட்ட தானியங்களால் செய்யப்பட்ட சாலடுகள் இவற்றுள் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். கீரை சாலட் / பழ சாலட்டும் சாப்பிடலாம். சாலட்டுகளுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் தூவி அலங்கரித்துக்கொள்ளலாம்.
மதிய உணவு: சிறிதளவு அரிசி சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். வெந்தயம் இலை, முருங்கை இலையில் தயாரான குழம்பை சேர்த்துக்கொள்ளலாம். தயிர் சாதம் அல்லது தயிர் கலந்தும் சாப்பிடலாம்.
மாலை நேர சிற்றுண்டி: பழ சாலட் / நட்ஸ் / ஒரு டம்ளர் மோர் / வேர்க்கடலை சாலட் ருசிக்கலாம்.
இரவு: அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் சாப்பாத்தியுடன் கோழி குழம்பு, கிரில் சிக்கன் சாப்பிடலாம். சைவ பிரியர்கள் சப்பாத்தியுடன் பருப்பு குழம்பு, சால்ஜி மற்றும் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ளலாம்.
திருமண ஏற்பாட்டில் கடைசி நேரங்களில் செய்யும் சிறு தவறுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதற்கு இடம் கொடுக்காமல் புன்னகையுடன் காட்சியளியுங்கள்.
ஊட்டச்சத்தியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி சீரான உணவுப்பழக்கத்தையும், வழக்கமான உடற்பயிற்சியையும் பின்பற்றுவது திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும் பொருட்கள்:
திருமணத்திற்கு முன்பு ஒளிரும் சருமத்தை பெறுவதற்கு அவசியம் சாப்பிட வேண்டிய ஐந்து உணவுகள் என்னென்ன தெரியுமா?
பீட்ரூட்: பீட்ரூட்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முகப்பருவை தடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். ரத்தத்தையும் சுத்திகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாதுளை: இது மிருதுவான, குழந்தை போன்ற மென்மையான சரும பொலிவை ஏற்படுத்தி கொடுக்கும். மாதுளை பழத்தை அப்படியே சாப்பிடலாம். ஜூஸாக தயாரித்தும் ருசிக்கலாம்.
பாதாம்: இதில் வைட்டமின் ஈ சத்து நிரம்பியுள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது.
தக்காளி: இதில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் லைகோபீன் சருமம் வயதாவதை தடுக்கக்கூடியது. சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தையும் அளிக்கும்.
மேலும் தக்காளியில் உள்ள அமில தன்மையானது, கரும் புள்ளிகள், பருக்களை விரட்டியடிக்கும் சக்தி கொண்டது.
ஸ்ட்ராபெர்ரி: இது சரும நிறத்தை மேம்படுத்தும் தன்மை வாய்ந்தது. தோல் சுருக்கங்களை குறைக்கவும் உதவி செய்யும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
திருமணத்திற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும்?
புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட சீரான உணவை உண்ணுங்கள். உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள்.
தொப்பை, கொழுப்பை கரைக்கும் உணவுகள் எவை?
அவகொடா, வாழைப்பழம், பெர்ரி, கிவி, அத்தி, அன்னாசி போன்ற பழங்கள், தயிர், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள். இவற்றை சாப்பிடுவதுடன் வழக்கமான உடற்பயிற்சியை பின்பற்றுவது கொழுப்பைக் குறைக்க உதவும்.
திருமணத்திற்கு முன்பு எப்படி உடல் மெலிய முடியும்?
மூன்று முறை சாப்பிடுவதற்கு பதிலாக ஐந்து, ஆறு முறை என பிரித்து சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள். உணவில் கலோரிகளைத் தவிருங்கள். குறைந்த கொழுப்பு கொண்ட பால் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட இறைச்சியை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
முகத்தை பளபளப்பாக்கும் உணவு எது?
பாதாம், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், மாதுளை தவிர, அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள், சிவப்பு அல்லது மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் (சால்மன் மற்றும் ஹெர்ரிங்) ஆகியவை முகத்திற்கு பிரகாசம் ஏற்படுத்தி கொடுக்கக்கூடியவை.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.